ஏழு கடல் தாண்டி Side B Review: ஒரு பிரேக் அப், ஒரு காதலை, அதன் நினைவுகளை, கனவுகளை அழித்துவிடுமா?

Estimated read time 1 min read

காதலி பிரியாவின் எதிர்கால கனவுகளையும் ஆசைகளையும் ‘அதிவேகமாக’ நிறைவேற்றத் துடிக்கும் காதலன் மனு அதற்காக தன் முதலாளியின் மகன் ஏற்படுத்திய விபத்திற்குப் பழியேற்று சிறைக்குச் செல்கிறார். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்களால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு ஆளாகிவிடுறார். யாருடைய ஆசையை நிறைவேற்ற இத்தனை வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தாரோ அந்தக் காதலிக்கு என்ன ஆனது, பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்லும் டீலிங்கில் ஏமாற்றிய வில்லனை என்ன செய்யப்போகிறார் என்கிற பல்வேறு எதிர்பார்ப்புகளோடு முடிந்ததுதான், ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைடு ஏ’.

மனு – பிரியா (ரக்ஷித் ஷெட்டி – ருக்மிணி வசந்த்) காதலின் ரணத்தை இன்ச் பை இன்ச்சாக இதயத்தில் இறக்கிய இப்படத்தின், இரண்டாம் பாகமான ‘சப்த சாகரடாச்சே எல்லோ – சைடு பி’ (ஏழு கடல் தாண்டி) அந்த எதிர்பார்ப்புகளைத் தக்கவைத்ததா?

ஏழு கடல் தாண்டி

சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறார் ரக்‌ஷித் ஷெட்டி. காதலி ருக்மிணியை ஒரேயொருமுறை பார்த்துவிடவேண்டும் என்று தவி தவிக்கிறார். தேடிக் கண்டுபிடித்துக் கண்காணித்தால் ருக்மிணி ஆசைப்பட்டதுக்கெல்லாம் நேர் எதிராக வறுமை சூழ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை அறிகிறார். ருக்மிணியின் கணவர் எந்நேரமும் குடித்துவிட்டு மயக்க நிலையிலேயே திரிந்துகொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரம் கொள்கிறார். காதலி, சந்தோஷமாக வாழவில்லை என்பதை உணர்கிறார். அதற்குப்பிறகு, அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை.

காதல்… காதல்… காதல்… காதலைத்தவிர இதயத்தில் வேறெதுவும் இல்லை, காதலுக்காக எப்போதும் எதையும் செய்யத் துணிவது, காதலின் வெறித்தனத்தை கண்களில் மட்டுமல்ல, அவர் சுவாசிக்கும் மூச்சுக்காற்றிலும்கூட அந்த தவிப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி. காதலியைப் பார்க்கத் துடிப்பது, பார்த்து வெடிப்பது என அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டே இருக்கிறார். சிறைப்படுத்தப்பட்ட காதல், கைகழுவி விட்ட முதலாளித்துவ சதி, சுற்றிவளைத்த சித்திரவதை எனக் காயம்பட்டுக் கிடந்த இதயத்துக்கு மருந்து தேடி நாயகன் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்கிறார். ஆனால், ’விருப்பப்பட்டு வர்ல… டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன்’ என்றெல்லாம் அடுத்தடுத்து அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் பழக்கப்பட்ட காட்சிதான் என்றாலும் நெகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. அதிலெல்லாம் ரக்ஷித் ஷெட்டியின் நடிப்பு மாஸ்டர்கிளாஸ்!

ரக்‌ஷித் ஷெட்டி

முதல் பாகத்தில் ஓவர் ஸ்பீடில் செல்லும் ரக்‌ஷித் ஷெட்டியையே நடிப்பிலும் எக்ஸ்பிரஷன்களிலும் ‘ஓரம் போ… ருக்மணி வண்டி வருது…’ என ஓவர்டேக் செய்திருப்பார் ருக்மிணி வசந்த். ஆனால், இரண்டாம் பாகத்தில் அந்த ஸ்பீடு இல்லை. திருமணத்தால் ஏற்பட்ட ஸ்பீடு பிரேக், பிசினசில் நஷ்டமடைந்த கணவன், குழந்தை, வறுமை நிறைந்த சூழல் என அவர் ஆசைப்பட்டதற்கும் கனவு கண்டதற்கும் நேர் எதிரான வாழ்க்கையைச் சுமந்து செல்லும் சராசரி மனைவி. இப்படியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாலும் சிறைக்குள் அடைபட்ட நாயகன் என்ன ஆனான் என்பதைப் பற்றி ஒரு நிமிடம்கூட யோசிக்காத அளவுக்கு இருக்கிறார் என்பது நெருடலாகவே இருக்கிறது.

கண்கள் இரண்டால் கட்டி இழுக்கும் பார்வை, காதலே பிடிக்காது என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டு நாயகனைக் காதலித்து காதலின் பெருவலியில் துடி துடித்துக் கதறுவது, இரண்டாம் பாகத்தில் நாயகி ருக்மிணியையே ஓவர் டேக் செய்துவிடுகிறார் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சைத்ரா. தோட்டாக்கள் துளைக்கும் வலியை விடப் பெருவலியைக் கொடுக்கும் காதல் பிரிவு வலியைச் சுமந்து செல்லும் ரசிகர்களை நடுநடுவே ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்கிறவர் ரக்‌ஷித் ஷெட்டியின் நண்பராக வரும் கோபால் தேஷ்பாண்டேதான். காமெடி செய்யவேண்டும் என்ற கட்டாயத்திற்காக முயற்சி செய்யாமல், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே படம் முழுக்க நம்மைச் சிரிக்க வைக்கிறார். அடிக்கடி துண்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளும் காட்சியில்கூட ஸ்கோர் செய்துவிடுகிறார். சீரியஸான திரைக்கதை என்ற லேபிளை உடைத்து, ரிலாக்ஸ் செய்கிறார்.

ருக்மிணி வசந்த்

‘ஒரு பிரேக் அப்பால், வேறொரு திருமணத்தால், வேறொரு வாழ்க்கைச் சூழலால் ஒரு காதலைப் பிரித்துவிடமுடியுமா என்ன? மீண்டும் சந்திப்பது, மீண்டும் பேசுவது, மீண்டும் தொடர்வது என எல்லாவற்றையும் தாண்டி, காதலிக்கும்போது கண்ட கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற முடியாதா என்ன?’ என்ற கேள்விகளை மீண்டும் எழுப்பியிருக்கிறார் இயக்குநர். உண்மையான காதல் வெடித்துச் சிதறும்போது அணு குண்டுகளை அல்ல, பூக்களையே வீசும் என அணு அணுவாக ரசித்து ரசித்து திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஹேமந்த் எம்.ராவ்வுக்குப் பாராட்டுகள். நிஜமான காதல் ரிவெஞ்ச் எடுப்பவர்களை உருவாக்காது, அதீத அன்பு செய்பவர்களையே உருவாக்கும் என்பதை மையப்படுத்தியது கட் அவுட்டுக்குரியது.

விளையாட்டுத் தனமான காதலுக்கே காதலியின் முகத்தில் ஆசிட் வீசும் காலகட்டத்தில், காதலுக்காக நாயகன் என்ன செய்தான் என்பதுதான் கதையின் ட்விஸ்ட் அண்டு சுவாரஸ்யம். இதுபோன்ற கதை சொல்லல்கள் எந்தக் காலத்திலும் வரவேற்கப்படவேண்டியவை.

சரண் ராஜின் பின்னணி இசையும் பாடல்களும் காதலின் வலியையும் வேதனையையும் நம் சப்த நாடிகளுக்குள்ளும் கடத்துகின்றன. அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதிவு தலைப்புக்கேற்ப இன்னும் கவிதையாக இருந்திருக்கலாம்.

Sapta Saagaradaache Ello – Side B

‘இனிமேதான் இந்த மனுவோட ஆட்டத்தைப் பார்க்கப்போறீங்க’ என்பதுபோல் நாயகன் சிறையிலிருந்து ரிலீஸாகும்போது, கொடுக்கப்பட்ட பில்டப்புகள் எல்லாம் வெறும் பில்டப்புகளாகவே தொடர்கின்றன. மெயின் வில்லனை விட்டுவிட்டு சைடு வில்லனுடன் சண்டை என சைடு வாங்குகிறது திரைக்கதை. அதுவும் வில்லனாக வந்து மிரட்டும் ரமேஷ் இந்திராவின் காட்சிகளில் அவரின் வாய்ஸ் மாடுலேஷனில் அத்தனை செயற்கைத்தனம். வில்லன் வேண்டும் என்பதற்காகத் திணிக்கப்பட்ட தேவையில்லாத ஆணியாகத்தான் இருக்கிறது அவரின் ட்ராக்! கதை 2021 – காலகட்டத்தில் நடப்பதுபோல் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இது ஒருவேளை 2001 ஆக இருக்குமோ… என்று கேட்கும் அளவுக்கு இருக்கின்றன சில காட்சிகள். பழைய நாவலைப் புரட்டிப் பார்த்ததுபோல் கிரிஞ்ச்சாக, பல்வேறு படங்களில் பார்த்த காட்சிகளையே நினைவூட்டுகின்றது திரைக்கதை.

குறிப்பாக, ‘காதல் வைரஸ்’ படமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. காதலி ருக்மிணியோடு ஒப்பிட்டு அப்படியொரு வார்த்தையைச் சொல்லி சைத்ராவை வீட்டிலிருந்து விரட்டுவது ஹீரோயிஸ பிம்பத்தில் விழுந்த கீறல். பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவரது காதலும் உண்மையாகத்தானே இருக்கிறது? திரைக்கதை முழுக்க நாயகன், நாயகியை மட்டுமே பின் தொடர்வதால் முதல் பாகத்தில் இருக்கும் வேகம் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது பெரிய மைனஸ். டீலிங்கில் ஏமாற்றி வாழ்க்கையில் விளையாடிய வில்லனைப் பழிவாங்குவதை இன்னும் கொஞ்சம் விரிவாகக் காட்டியிருக்கலாம்.

ரக்‌ஷித் ஷெட்டி – ருக்மிணி வசந்த்

யாரைப் பழிவாங்குவது எனத் தெரியாமல் `முப்பொழுதும் உன் கற்பனைகள்’ எனக் காதலியைப் பின் தொடர்ந்து கண்காணிப்பது, அதை மட்டுமே முழுநேர வேலையாக வைத்துக் கொள்வது, அடுத்தடுத்து எதிர்பார்த்ததைப்போலவே நடந்துகொள்வது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த `ஏழு கடல் தாண்டிய பயணம்’ முதல் பாகம் அளவுக்கு ரசிக்க வைப்பதாய் இல்லை. ஆனால், காதலின் பேரழகை, பிரிவின் பெருவலியை, எதையோ தொலைத்த உணர்வை நமக்கும் கடத்தியதற்காக மட்டும் `ஏழு மைல்கள்’ தாண்டி நிச்சயம் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours