புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் காவல்துறையினரின் பயிற்சியின் போது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலை அருகேயுள்ள அம்மாசத்திரத்தில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் காலை ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள நார்த்தாமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த குண்டு பாய்ந்துள்ளது.
அப்போது அந்த வீட்டில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் உணவருந்திக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மயக்கமடைந்தார். மற்றொரு குண்டு அவரது நெஞ்சு பகுதியில் பாய்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் தற்போது சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 வருடத்திற்கு முன்பாக இதேபோன்று ஒரு சம்பவம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபடும் போது நடந்துள்ளது. தற்போது ஒரு சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
+ There are no comments
Add yours