திருச்சி:
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அருகே வீட்டின் கழிவறையில் சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகனான 23 வயதான சூரியபிரகாஷ் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். கூலி வேலை செய்தாலும் விலையுயர்ந்த செல்போன் பைக் என டிப்டாப்பாக சுற்றி வந்த சூரியபிரகாஷ் அப்பகுதியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார். சிறப்பு வகுப்புகள் வகுப்புகள் இருப்பதாக கூறி அந்த சிறுமி வீட்டில் பொய் சொல்லிவிட்டு சூரியபிரகாஷ் உடன் பல இடங்களில் சுற்றித் இருந்துள்ளார். மேலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற சூரியபிரகாஷ் தனிமையில் அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.
கர்ப்பமான சிறுமி
இதில் சிறுமி கர்ப்பம் ஆன நிலையில் இதுகுறித்து சூர்ய பிரகாஷிடம் கூறியபோது தற்போது திருமணம் செய்தால் பிரச்சினை ஆகிவிடும் என கூறியுள்ளார். சில நாட்களில் சிறுமியுடன் பேசுவதை சூரியபிரகாஷ் தவிர்த்ததோடு, வெளியூர் வேலைக்குச் சென்று செல்போனையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாத அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். சிறுமிக்கு வயிற்றில் ஏதோ கட்டி ஏற்பட்டுள்ளது என நினைத்த பெற்றோர் போக போக சரியாகி விடும் என நினைத்துள்ளார்.
கழிவறையில் பிரசவம்
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது என்ன செய்வது என்று அறியாத சிறுமி கழிவறைக்குச் சென்று கதவை தாளிட்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி மயக்கமடைந்த நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் அவருக்கு அருகே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து குழந்தையையும் மகளையும் அவரது பெற்றோர் மீட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போதுதான் சூரிய பிரகாஷ் குறித்து சிறுமி கூறியுள்ளார்.
காதலன் கைது
17 வயதில் திருமணம் செய்யாமலேயே மகள் குழந்தை பெற்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிச் சிறுமி வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours