அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படு என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தலைப்புச் செய்தி என்று கூறி இந்த வாக்குறுதியை திமுக தலைவர் ஸ்டாலின் வாசித்தார். தேர்தல் அறிக்கையிலோ, அல்லது திமுக தலைவர் வாசித்தபோதோ எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு மேடையிலும் திமுக இரண்டாம் கட்ட தலைவர்களால் இந்த வாக்குறுதி எடுத்துரைக்கப்பட்டது. முதலமைச்சரின் மகன் ஒருபடி மேலே சென்று “ கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி நாளைக்கே போய் வாங்கிடுங்க. வரப்போவது நம்ம ஆட்சி, நம்முடைய தலைவர் தள்ளுபடி செய்திடுவாரு என்று கூறிய வீடியோ ஆதாரம் உள்ளது.

நகை கடன் வாங்கியவர்களில் கிட்டதட்ட 75 சதவீத பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. 48,84,726 பயனாளிகள் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35,37,693 கடனாளிகள் நகைகடன் பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறது. அப்படியென்றால் வெறும் 13,47,033 பேர் மட்டுமே கடன் பெறத் தகுதியானவர்கள். இதற்கு முன்பு வெளியிட்ட அரசாணையில் 16 லட்சம் பயனாளிகள் என்ரு குறிப்பிட்டு இருந்தது. பகுப்பாய்வுக்கு பின் அதுவும் 2.5 லட்சம் குறைந்துவிட்டது.

தேர்தல் வாக்குறுதிப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் நிதிநிலை அறிக்கையில் 6 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு தற்போது 4,500 கோடி ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது. இதை சரியாக கணக்கிடும்போது இதற்கான தொகை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

திமுக அரசின் இந்தச் செயல்பாட்டினை நினைக்கும் போது “ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது” என்ற பழமொழிதான் அனைவரின் நினைவுக்கும் வருகிறது.  நகைக்கடன் தள்ளுபடிக்கான திமுக அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது. இவர்கள் கடனாளிகளாக ஆக்கப்பட்டதற்கு தி.மு.க தான் காரணம். இது நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம். வாக்களித்த மக்களை வஞ்சித்த திமுக அரசிற்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

பகுப்பாய்வு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை? பகுப்பாய்வு குறித்து ஏன் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்யவில்லை? நகைக்கடன் வாங்கத்தூண்டும் வகையில் ஏன் பிரச்சார மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வி மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பகுப்பாய்வு செய்ததைப் போல நாம் பகுப்பாய்வு செய்யாமல் வாக்களித்துவிட்டோமே, பகுப்பாய்வு செய்திருந்தால் தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்காதே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டோம் என மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனைத் தள்ளுபடி செய்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *