சென்னை:

நகை கடனைத் தள்ளுபடி செய்வோம் என்கிறீர்கள், ஆனால் வாக்குறுதியை தள்ளுபடி செய்துள்ளீர்களே என நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றாக கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் வாங்கிய 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு சுமார் நாற்பத்தி எட்டு லட்சம் கடன் விவரங்கள் ஆராயப்பட்டன.

நகைக்கடன் தள்ளுபடி

தொடர்ந்து பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப் பட்டவர்கள் நகை கடனை முழுமையாக செலுத்தியவர்கள் கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும், அரசின் விதிமுறைகளின்படி சுமார் 13 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை விமர்சனம்

திங்கட்கிழமை முதல் கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு நகைகள் வழங்கும் பணி தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார்.இந்நிலையில் சுமார் முப்பத்தி ஆறு லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வாக்குறுதி தள்ளுபடி

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான செய்தியை பதிவிட்டு கருத்து கூறியுள்ள அண்ணாமலை, நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள் ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! எனவும், இன்று தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, 72 சதவீத நகைக் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது எப்படி ஏற்கத்தக்கது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களுக்கு என்ன பதில்?

மேலும், தள்ளுபடி என்ற பெயரில், தேர்தல் பிரசாரத்தில் மக்களை நகைக்கடன் வாங்கும்படி உதயநிதி ஸ்டாலின் நிர்ப்பந்தித்தது ஏன்? போலியான வாக்குறுதியை நம்பி ஏமார்ந்து வட்டி கட்டி வரும் பெண்களும் அவர்களது குடும்பத்தாரும் படும் இன்னல்களுக்கு இந்த @arivalayam அரசு என்ன பதில் வைத்துள்ளது? எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *