Loading

சென்னை:

அதிமுக – பாஜக இடையிலான வருங்கால கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேட்டி அளித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் தனி தனியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டு நாட்களாக நடந்தஹ் நிலையில் பாஜக கேட்ட இடங்களை அதிமுக கொடுக்க முன்வரவில்லை.

அண்ணாமலை பேட்டி

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் இது தற்காலிக முடிவுதான் என்று நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அதாவது இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும்தான், லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை பேசி இருந்தார். அண்ணாமலை அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பிட்ட இடங்களில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பெரிய இடமாக இருக்கும் அதிமுகவிற்கு இடம் ஒதுக்குவதில் சில பிரச்சனைகள் இருந்தது.

அதிமுக பாஜக

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதே நேரத்தில் அதிமுகவில் நான் அதிகம் நேசிக்க கூடிய ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் தெளிவாக பேசி இருக்கிறோம். அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். வரும் எதிர்கால தேர்தல்களில் அதிமுகாவுடனான கூட்டணி தொடரும். 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

கூட்டணி முறிவு

அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலத்தில் தொடரும் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்கால கூட்டணி குறித்து பட்டும் படாமல் பேசி இருக்கிறார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், இன்றைய தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தனியாக நிற்கிறோம். அவர்கள் தனியாக நிற்கிறார்கள். எதிர்கால தேர்தல் பற்றி தேர்தல் வரும் போது பேசலாம்.

எடப்பாடி பழனிசாமி

அப்போது பதில் சொல்கிறோம். அது வேற இது வேறு.. இது மாநிலத்திற்குள் நடக்கும் தேர்தல். இதில் அதிமுகவினருக்கு அதிக இடங்கள் கொடுக்கும் வகையில் இப்போது இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இது நகராட்சி, மாநகராட்சி அளவில் நடக்கும் தேர்தல் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதாவது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி சொல்லாமல்.. எதிர்காலத்தில் அதை பற்றி பேசலாம் என்று பட்டும் படாமல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இரண்டு நிலைப்பாடு

அண்ணாமலை கூட்டணி எதிர்காலத்தில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி 2024 லோக்சபா கூட்டணி குறித்து இப்போது பேச மறுத்துவிட்டார். அதே சமயம் நயினார் நாகேந்திரன் குறித்து நேற்று பேசிய எடப்பாடி, நயினார் நாகேந்திரா தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். தவறு செய்யாத மனிதனே கிடையாது. தவறு செய்த ஒருவர் வருத்தம் தெரிவித்தால் அதைப் பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும். எங்களிடம் அந்த பக்குவம் உள்ளது என்று எடப்பாடி பேசியது குறிப்பிடத்தக்கது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *