சென்னை;

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வழிவகை செய்யும் மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார்.இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு (மசோதா)’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் நிலை குறித்தும் அது தொடர்பாக ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து இருக்கும் ஆளுநரின் தகவல் தொடர்பு அதிகாரி எஸ் வெங்கடேஸ்வரன், கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் அலுவலகம் சார்பில் ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டதா என தமிழக முதல்வரின் செயலகம் மற்றும் தலைமை செயலாளர் அலுவலகத்திலும் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சரியான பதில் அளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தலைமைச் செயலாளரின் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *