புதுக்கோட்டை;
14 வயது சிறுமியை, தந்தை முறையிலான அம்ஜத் கான் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு வாழ் நாள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலணியைச் சேர்ந்தவர் அம்ஜத் கான் (44). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு, அம்ஜத் கான் 3-வது கணவர். இந்த நிலையில் தான், அந்தப் பெண் இரண்டாவது கணவருக்குப் பிறந்த 14 வயது மகள், மகனையும் வைத்துக் கொண்டு, அம்ஜத் கானுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், பெற்ற மகள் போல் வளர்க்க வேண்டிய அந்த 14 வயது சிறுமியை, அம்ஜத் கான் மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதில், அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். தனது மகளின் கர்ப்பத்திற்கு அம்ஜத் கான் தான் காரணம் என்பது தெரிந்ததும் உடனே, அந்தப் பெண் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார் , போக்சோ சட்டத்தின் கீழ் அம்ஜத் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 18-ம் தேதி நடந்த சம்பவம் குறித்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி முனைவர் சத்யா, 14 வயது சிறுமியை, தந்தை முறையிலான அம்ஜத் கான் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் அதிரடி தீர்ப்பளித்தார்.
மேலும், அபராதத்தைக் கட்டத் தவறினால், ஓராண்டு கூடுதல் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ரூ.3,50,000 இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.2,50,000 இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அம்ஜத் கான் திருச்சி மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நடைபெற்ற 9 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
+ There are no comments
Add yours