சென்னை :
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் தயாரிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல், தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என, இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும்.
திங்கள் தவிர இதர நாட்களில், அரசு மருத்துவ நிலையங்களில், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
இது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு, உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்க, இன்று தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக கூட்டம் நடக்க உள்ளது.
+ There are no comments
Add yours