விருதுநகர் :
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் 3 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிச. 17ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.தலைமறைவான ராஜேந்திரபாலாஜியை பிடிக்க குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் விரட்டி பிடித்து கைது செய்தனர். இவரை விசாரணைக்காக விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர். நள்ளிரவில் 3 மணி நேரம் விசாரணைக்கு பிறகு இன்று காலை ராஜேந்திரபாலாஜியை எம்எல்ஏ, அமைச்சர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2ல் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் சிறை காவல் விதித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். முன்னதாக ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜனவரி 20ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.
+ There are no comments
Add yours