நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமசோதா கிடப்பில் உள்ள நிலையில், அதுகுறித்து எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலச்சர் மு.க.ஸ்டாலின், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குகோரும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்ட மசோதா மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காத நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் மனு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குழுவுக்கு நேரம் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் 110விதியின் கீழ் ஆற்றிய உரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களை மத்திய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours