கோவை:

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இரவு ஊரடங்கு & வணிக வளாகங்களுக்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு சார்பில் நடத்தப்பட இருந்த பல்வேறு நல்திட்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல பொங்கல் விழா சார்ந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கு குறித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கோவை ஆட்சியர் சமீரன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், “கொரோனா தொற்று கோவையில் அதிகமாகப் பரவி வரும் நிலையில் கோவையில் இரவு 10 மணி முதல் காலை 5 வரை ஊரடங்கு இருக்கும். வரும் 9ஆம் தேதி, (ஞாயிறு) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். மழலையர் மற்றும் 9 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இருக்காது. மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா 2ஆம் அலை சமயத்தில் தினசரி 4700 வரை கொரோனா பாதிப்பு சென்றது. அதன் படிப்படியாகவே நிலைமை மேம்பட்டு, தினசரி வைரஸ் பாதிப்பு 72ஆக ஒரு கட்டத்தில் குறைந்தது. தற்போது ஒரே நாளில் 240 ஆக கேஸ்கள் எண்ணிக்கைஉயர்ந்துள்ளது.

சிகிச்சை

பொது இடத்தில் கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் கோவை மாவட்டத்தின் 11 மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடீசியா அரங்கில் 350 படுக்கைகள் உள்பட மாவட்டத்தில் 2730 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன, தற்போது படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் போதியளவு உள்ளது. 99 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொள்ளளவு, 2750 ஆக்ஸிஜன் கான்சன்ரேட் தயாராக உள்ளன.

பரிசோதனை

கொரொனா பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். கடந்த வாரத்தில் ஒமிக்ரான் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 5300 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1400க்கும் மேற்பட்ட பொது வினியோக கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் முறையில் வழங்கப்பட்டு, கூட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகள் இல்லை

கோவையில் தற்போது வரை கட்டுப்பாட்டுப் பகுதிகள் இல்லை. துடியலூர், சூலூர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படும் நிலையில் தினசரி கொரோனா சோதனை 9 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் 11 ஆயிரம் பரிசோதனை வரை செய்யப்படும். பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றினால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை.

ஜல்லிக்கட்டு போட்டிகள்

வரும் 9-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி மற்றொரு தேதியில் நடத்தப்படும். எந்த தேதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும். இதைத் தமிழக அரசின் ஆலோசனைக்கு அனுப்பி உள்ளோம்” என்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *