உதகை: உதகை நீதிமன்றத்தில் இன்று (ஆக.30) விசாரணைக்கு வந்த கோடநாடு கொலை வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இதுதொடர்பாக சோலூர் மட்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கொள்ளைக் கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் தரப்பில் வாளையார் மனோஜ் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான் ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி-யான முருகவேல் தலைமையில் போலீஸார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கம் இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, “தற்போது வரை சிபிசிஐடி போலீஸார் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவித்தோம். மேலும், வெளிநாட்டு செல்போன் தகவல்கள் குறித்த இன்டர்போல் போலீஸார் அறிக்கை எதுவும் தரப்படவில்லை எனவும் தெரிவித்தோம். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.” என்று வழக்கறிஞர் ஷாஜகான் கூறினார்.