புதுச்சேரி:
புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 80 வயது முதியவருக்கும், 20 வயது பெண்ணுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த பிறகு மக்கள் பொது இடங்களுக்கு செல்ல மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இந்தியா முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறது. இதனை கண்டித்து புதுச்சேரி அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் இதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒமிக்ரான் வந்தால் புதுச்சேரியில் கட்டுப்படுத்த முடியாது. புதுச்சேரியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகிவிட்டால் மக்கள் அவதி அடைவார்கள். எனவே இந்த ஒமிக்ரானை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும். இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் புதுச்சேரியில் முதல் முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுச்சேரி காமராஜர் நகரை சேர்ந்த 80 வயது முதியவருக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை செய்த போது இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு பெங்களூரு ஆய்வகம் புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு தற்போது பரிசோதனை முடிவுகளை அனுப்பியுள்ளது. இதனை பார்த்த சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் இரண்டு பேருக்கு தாக்கி இருப்பதை அறிந்தவுடன் அவர் முதலமைச்சருடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours