ஒட்டுமொத்த வீட்டையும் கலகலப்பாக்கிய நிக்சனின் தந்தை
‘வீட்டில் அடித்தும் அணைத்தும் திருந்தாத மகனை, பிக் பாஸ் வீடும், சக போட்டியாளர்களும் மாற்றி விட்டார்கள்’ என்பதுதான் நிக்சனின் தந்தை நையாண்டியாக மறுபடி மறுபடி சொன்ன செய்தி. அந்தப் பெருமிதத்தைத்தான் நக்கலும் குத்தலும் அன்பும் கலந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். அர்ச்சனாவிற்கு நன்றி சொன்ன வேலாயுதம் “அவன் திருந்தறதுக்கு நீதாம்மா வாய்ப்பு கொடுத்தே” என்பதில் ஆழமான பொருள் உள்ளது. அந்தச் சம்பவத்தினால்தான் நிக்சனின் அதீத கோபம் வெளிப்பட்டு, மனம் வருந்தி, கமலின் முன்னால் சபையில் மன்னிப்பு கேட்டு “இனி மேல் இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன்” என்று வாக்குறுதி தரும் அளவிற்குச் சென்றார். ‘கெட்டதிலும் ஒரு நல்லது’ என்பது போல் இதை நிக்சனின் தந்தை பார்க்கிறார்.
“நிக்சன் என் தம்பிங்க” என்று அர்ச்சனா ஆதரவாகப் பேசியது நல்ல விஷயம். “அவன் எழுபது சதவீதம் நல்ல பையன்தான். ஆனால் பாக்கியுள்ளதையும் மாத்தறதுக்கு காரணமா இருந்தீங்களே” என்றார் நிக்சனின் தந்தை. “கருங்கல்லா உள்ளே வந்தான். விசித்ரா மேடம். நீங்கதான் அவனை ஆப்டிமைஸ் பண்ணீங்க. பிக் பாஸ் போட்டில கலந்துக்கிட்டது அவனுக்கு ஃபெனிபிட்டோ.. இல்லையோ.. எனக்குத்தான் ஃபெனிபிட்” என்றெல்லாம் உணர்வுபூர்வமாக நகைச்சுவை கலந்து பேசினார் வேலாயுதம்.
பிறகு சுயபரீசீலனையாகவும் அவரது வார்த்தைகளில் வருத்தம் வெளிப்பட்டது. “அவன் முரட்டுத்தனத்திற்கு நானும் காரணமாக இருக்கலாம். நானும் அவன் கிட்ட மனசு விட்டு பேசியிருக்கலாம். இவனாலதான் நான் வள்ளலார் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். சாயந்திரம் ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பான். ரொம்ப போராடினோம். மாற மாட்டானான்னு. இங்க ஒவ்வொருத்தரும் அவனை வெச்சு செஞ்சிட்டீங்க. நன்றி” என்றார். ‘வெச்சு செஞ்சிட்டீங்க’ என்கிற பிக் பாஸ் வீட்டின் டிக்ஷனரி வார்த்தை அவரிடமும் ஒட்டிக் கொண்டது போல.
“விஜய்.. டான்ஸ்ல உன்னை ஜெயிச்சிட்டான் பார்த்தியா.. எதுனா வாங்கித் தரலைன்னா வீட்ல அப்படி ஆடுவான்.. அந்தத் திறமையை இங்க யூஸ் பண்ணிக்கிட்டான். அதை வெச்சு ஜெயிச்சிட்டான். அடிச்சும் திருந்தாத பிள்ளையை பிக் பாஸ் கேப்டன்ஸி கொடுத்து கூடவே மணியும் வெச்சு ஆப்பு வெச்சாரு. அதையெல்லாம் டிவில பார்த்து சிரிச்சு சிரிச்சு சந்தோஷம் அடைந்தோம்” என்ற வேலாயுதம், அடுத்து சொன்னதுதான் ஹைலைட் மோமெண்ட். “திருந்திட்ட இல்லடா.. உன் நம்பரை பிளாக் லிஸ்ட்ல இருந்து எடுத்துடறேன்”.. (அந்த அளவுக்கு நடந்துச்சா?!)
நிக்சனுக்கும் அவரது தந்தைக்கும் உள்ள உறவைப் பார்க்கிற போது ‘பொல்லாதவன்’ படத்தின் தனுஷ்தான் நினைவிற்கு வருகிறார். படத்தில் பிற்பாடு அந்த கசப்பான உறவு அப்படியே தலைகீழாக மாறும். “இங்க நாய் குரைச்சவுடனே எழுந்துடுவான். வீட்ல நாய் மாதிரி நாங்க குரைச்சா கூட எழுந்திருக்க மாட்டான்” என்று அவர் ரைமிங்காக சொன்னது நல்ல வாக்கியம். மணியின் அம்மா உள்ளிட்ட அனைவருமே வாய் பொத்தி சிரித்தார்கள்.
+ There are no comments
Add yours