`இன்டர்ஸ்டெல்லர்’, `இன்செப்ஷன்’, `டெனட்’, `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், 3டி தொழில்நுட்பம் மற்றும் அதீத கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றைப் பெரிதும் விரும்பாதவர். `இன்செப்ஷன்’ படத்தை 3டி-யில் ரி-ரிலீஸ் செய்யக் கேட்டதற்குக் கூட விடாப்பிடியாக அதை மறுத்தவர். இவரின் அடுத்த படைப்பாக ஜூலை 21-ம் தேதி வெளியாகிறது ‘ஓப்பன்ஹெய்மர்’. இப்படம் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஓப்பன்ஹெய்மர்

கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாத நோலன், இப்படத்தில் அணு சக்தி சோதனை, அணு வெடிப்பு உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறும் என்பதால் அவற்றிற்காவது கிராபிக்ஸைப் பயன்படுத்துவாரா, இல்லை அதையும் ரியலாகவே எடுத்து விடுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது.

கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தின் மீது விருப்பமில்லாத நோலனும், இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் அணுகுண்டு (Nuclear weapon) வெடிப்பதை கிராபிக்ஸில் காட்சிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், அது தத்ரூபமாக இல்லை, செலவும் அதிகம் என்று அந்த முயற்சியைப் பாதியிலேயே கைவிட்டார்.

பிறகு, உண்மையிலேயே ஒரு அணு ஆயுத சோதனையை மீட்டுருவாக்கம் செய்து (மாதிரி மட்டுமே) கிராபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாக அணு ஆயுத சோதனைக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.

உட்டி ஆலன் (Woody Allen), கிளின்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood) போன்ற சில புகழ்பெற்ற இயக்குநர்கள் கிராபிக்ஸ் காட்சிகளை பெரும்பாலும் விரும்புவதில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் தத்ரூபத்திற்கும், உயிரோட்டோட்டத்திற்கும் இடையூறாக இருக்கின்றன என்பதும் வீண் செலவு என்பதுமே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

Christopher Nolan

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள கிறிஸ்டோபர் நோலன், தான் இதுவரை ஸ்மார்ட்போன், இ-மெயில் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை என்றும் இப்படித் தொழில்நுட்பங்களை விரும்பாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும் பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், “என் குழந்தைகள் என்னை ‘Luddite’ என்று அழைப்பார்கள், அதாவது தொழில்நுட்பத்தை முற்றிலும் விரும்பாதவர். தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. அதேசமயம் அவை அதிக கவனச் சிதறல்களையும் ஏற்படுத்துகின்றன.

எனக்கு எளிதில் கவனச் சிதறல்கள் ஏற்பட்டுவிடும். அதனால், தொழில்நுட்பத்தின் மீது எனக்கு அதிக அளவு ஆர்வமில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நாள் முழுவதும் ஸ்கிரிப்ட் மற்றும் அதற்கானப் பணிகளை மும்முரமாகச் செய்வதால் ஸ்மார்ட்போன் பயன்படுத்த நேரமிருக்காது. அதற்கான தேவையும் இருப்பதில்லை.

கிறிஸ்டோபர் நோலன்

நான் எளிதில் கவனச் சிதறல் அடைபவன் என்பதால் ஓய்வு நேரத்தில்கூட இணையத்தைப் பயன்படுத்துவதை விரும்பமாட்டேன். இன்று பலரும் இணையத்தில் மூழ்கி தங்கள் நேரங்களைச் செலவிடுகின்றனர். ஆனால், அந்த நேரத்தை நான் எனக்குத் தேவையான பயனுள்ளச் செயல்களைச் செய்வேன்.

யாரையாவது தொடர்புகொள்ள வேண்டுமென்றால் இன்றும் லேண்ட்லைனைத்தான் பயன்படுத்திப் பேசுவேன். இ-மெயில் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் இருக்கும். எனக்கு இதுபோல் தொழில்நுட்பத்தைப் பெரிதும் விரும்பாத பழக்கம் இருக்கிறது அவ்வளவே! மற்றபடி தொழில்நுட்பத்தை வெறுப்பவன் அல்ல நான்!” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: