பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்களுள் ஒருவர் அக்ஷயா. பிக்பாஸ் வீட்டினுள் போரிங் கன்டெஸ்டண்ட் ஆக இருக்கிறார் என அவர் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் அவரை ஆரம்பம் முதல் பார்த்தவர்களால் அவருடைய குணத்தைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
தொடர்ந்து அவருக்கு சப்போர்ட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அக்ஷயாவின் சகோதரரும், நடிகருமான அபிஷேக் உதயகுமாரிடம் பேசினோம்.
“சின்ன வயசில இருந்தே எனக்கு நடிப்புன்னா பிடிக்கும். ஷார்ட் பிலிம்ஸ், விளம்பரப் படங்கள்னு கொஞ்ச, கொஞ்சமா பண்ண ஆரம்பிச்சேன். சில படங்களை ரீ- கிரியேட் பண்ணும்போது ஜோடியா நடிக்கிறதுக்கு லேடி கேரக்டர் தேடினால் சுலபமா கிடைக்காது. எனக்கு குக்கு (அக்ஷயா)வைத் தான் தெரியும். அதனால அவ கூட சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். நான் எனக்குத் தெரிஞ்சதை அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவளுக்கும் இந்தத் துறை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நிறைய பேர் நாங்க இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் நடிப்புத்துறைக்குள் வந்ததாக நினைக்கிறாங்க. ஆனா, உண்மையில் அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுக்குள் வந்துட்டேன். அசிஸ்டென்ட் டைரக்டர், ஆர்ட் டைரக்டர்னு சினிமா துறையில் நிறைய ஃபீல்டில் வேலை பார்த்திருக்கேன். அக்ஷயாவும் ஸ்கூல் டிராமாவில் தொடங்கி விளம்பரப் படங்கள் வரைக்கும் பண்ணியிருக்கா. அதுக்குப்பிறகுதான் நாங்க இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்சோம்!
ஆரம்பத்தில் நாங்க பண்ற ரீல்ஸ் பார்த்துட்டு அண்ணன் – தங்கச்சி எப்படி ஜோடியாக ரீல்ஸ் பண்ணலாம்னு நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. அப்படி கேட்குறவங்களைப் பார்க்கும்போது, `யாருடா இவனுங்க?’னு தான் தோணும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்து நடிச்சா கூட எங்களுடைய லிமிட்ஸ் எங்களுக்குத் தெரியும். நடிப்புங்கிறது ஒரு கலை அவ்வளவுதான்! அதைக் கூட புரிஞ்சிக்காம சிலர் கமென்ட் பண்ணுவாங்க. அதை நாங்க ரெண்டு பேரும் பெருசா எடுத்துக்கிறதில்லை!’ என்றவரிடம் அக்ஷயா குறித்துப் பேசினோம்.
“கலைஞனுக்கு மேடை கிடைக்கிறதுதான் பெரிய விஷயம். அவளுடைய திறமையை வெளிக்காட்டுறதுக்கு கிடைச்ச மேடை தான் பிக்பாஸ். குக்கு எதுனாலும் என்கிட்ட தான் டிஸ்கஸ் பண்ணுவா. அவ என்கிட்ட போகலாமான்னு கேட்டப்ப, எனக்கு பர்சனலா கமல் சாரை ரொம்பப் பிடிக்கும். நேரடியா அவங்க நம்மளை பார்ப்பாங்க, நம்மகிட்ட பேசுவாங்க. நம்ம திறமையை வெளிக்காட்டவும் இது ஒரு நல்ல வாய்ப்புன்னு மிஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேன். அக்ஷயாவுடைய ரியல் கேரக்டரே இதுதான்! அவளால அங்க சில விஷயங்கள் வெளிக்காட்ட முடியல. அக்ஷயா எப்பவும் ஒருத்தவங்களை மரியாதை குறைவா நடத்த மாட்டா, அதே மாதிரி புறம் பேசுறது பண்ண மாட்டா. அதைத்தான் அந்த வீட்டிலும் பண்றா.
நானும், குக்குவும் அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவோம். ஆனா, அப்பாவே தப்பு பண்ணினாங்கன்னா குக்கு அப்பாகிட்ட கேள்வி கேட்பா. அவ கேட்குற கேள்விக்கு அப்பாகிட்ட பதில் இருக்காது. அந்த அளவுக்கு தெளிவா தப்புன்னா எதிர்த்து கேட்பா. அவளுக்கு கோர்வையா தமிழ் பேசத் தெரியாது. நான் தமிழ் இன்டஸ்ட்ரியில் ரொம்ப வருஷம் இருந்ததால நான் கோர்வையா பேசுறேன். அவளுக்கு என் அளவுக்கு சுலபமா கோர்வையா பேச வராது. நாங்க வீட்டில் மலையாளத்துல தான் பேசுவோம். கோபத்துல எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது தப்பா பேசிடுவேனோ என்கிற பயத்துல தான் அக்ஷயா இன்னும் எதிர்த்து கேள்வி கேட்க தயங்குறா. இது மைனஸ் பாயின்ட் தான். இந்த விஷயத்துல அக்ஷயா மாட்டிக்குவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல.
பலரும் மாயா, பூர்ணிமா கூட இருக்கிறதனால இவளும் அவங்களுடைய கேங்னு நினைக்கிறாங்க. அக்ஷயா அவங்க கூட இருக்காங்க தான் ஆனா, அவங்க பிளான் பண்ணி பண்ற எந்த விஷயங்களிலும் அக்ஷயா தலையிட மாட்டாங்க. நாங்க எங்க ஒர்க் பண்ணினாலும் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் அக்ஷயா மேலத்தான் இருக்கும். அப்படி அக்ஷயா எல்லாருடைய கவனத்தையும் அவ பக்கம் கொண்டு வந்திடுவா. ஆனா, பிக்பாஸ் வீட்டுல அது மிஸ் ஆகுது! இன்னொரு விஷயம் அக்ஷயா யாருடைய ஸ்பேஸையும் எடுத்துக்க மாட்டா. அங்க பேச விடாம ஒருத்தருடைய ஸ்பேஸை இன்னொருத்தர் பயன்படுத்திட்டு இருக்காங்க. மத்தவங்க பேசும்போது அவங்க பேசுறதை கேட்கணும், அவங்களுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும்னு நினைக்கிறது நல்ல குணம் தான். ஆனா, பிக்பாஸ் வீட்டுக்குள்ள அந்த கேரக்டர் ஒர்க் ஆகாது!” என்றவரிடம் விஷ்ணு – அக்ஷயா பிரச்னை குறித்துக் கேட்டோம்.
“விஷ்ணு எப்பவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவாரு. காபி, பூஸ்ட் கலக்குற மாதிரிதான் கோகோ பவுடர் கலக்கிக் கொடுக்கணும். அது பெரிய விஷயமெல்லாம் இல்ல. பிராவோ ஏற்கனவே போட்டு வச்சிருந்தாங்க. அதனால அக்ஷயா கேட்டாங்க. ஆரம்பத்தில் விஷ்ணு பேசினப்ப அக்ஷயா கண்டுக்கல. அவர் பேசவும் தான் குக்கு எமோஷனல் ஆகிட்டா. கோகோ மில்க் வேணும்னா வீட்டுக்குப் போய் தான் குடிக்கணும்னு டெலிகாஸ்ட் ஆனதைப் பார்த்துட்டு ஆடியன்ஸ் சிலரும் என்னன்னே தெரியாம கமென்ட் பண்றாங்க. அவங்களையும் எதுவும் சொல்ல முடியாது. டெலிகாஸ்ட் ஆகிறதைப் பார்த்துட்டு அவங்க சொல்றாங்க. விஷ்ணு ஆரம்பத்தில் இருந்தே அக்ஷயாவைத்தான் டார்கெட் பண்ணிட்டு இருக்காரு ஏன்னு தெரியல!” என்றவர் தொடர்ந்து பேசினார்.
“பிரதீப் பிரச்னை கூட வெளியில் தப்பா தெரிஞ்சிருக்கு. இத்தனை பேர் அவருக்கு எதிரா சொல்றாங்கன்னா ஏதோ காரணம் இருக்கும். ஆனா, நான் கண்ணால எதையும் பார்க்கலன்னு தான் குக்கு சொல்லியிருப்பா. பிரதீப்பை அக்ஷயா ஏமாத்திட்டான்னுலாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. கன்டென்ட்டிற்காக ஒரு விஷயம் குக்கு பண்ண மாட்டா. அவளுடைய திறமையை வெளியே காட்டுறதுக்காகத்தான் அவ வீட்டுக்குள்ள போயிருக்கா. அதுல அவ கவனமா இருப்பா.
பொதுவாகவே அக்ஷயா கோபப்பட்டு, கத்தி சண்டை போட்டு நாங்க யாருமே பார்த்தது இல்ல. அவங்களுக்கு அதிகமா கோபம் வந்தா உடைஞ்சு அழுதிடுவாங்க. அவங்களுடைய வீக்னெஸை கேமரா முன்னாடி காட்டுறதுக்கு அவங்க விரும்பல. அதனால தான் ரெஸ்ட் ரூமுக்குள்ள போய் அழுதுட்டு இருக்கா. ஆரம்பத்தில் விஷ்ணு கையை இழுத்தப்ப கூட குக்கு நினைச்சிருந்தா அதை பெரிய விஷயமாக ஆக்கியிருக்கலாம். அவங்க ஏதோ கோபத்துல பண்ணாங்க பிரவாயில்ல விடுன்னு தான் சொன்னா. அந்த வீட்டுல 2,3 பேர் எப்பவும் அக்ஷயாவைத்தான் டார்கெட் பண்ணிட்டு இருக்காங்க. ஏன்னு தெரியல!
அக்ஷயாவை எல்லாரும் வீக் கன்டெஸ்டென்ட்னு சொல்றாங்க. அவங்க எப்படி வீக் ஆக இருக்க முடியும்? ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிக நாமினேஷன்ல வந்து சேவ் ஆன போட்டியாளர் அக்ஷயா தான்! இத்தனை சீசனில் அவங்களா எல்லாரையும் கூப்பிட்டு அவங்களுடைய ஆக்ட்டை நடிச்சுக் காட்டினது அக்ஷயா மட்டும்தான். அதே மாதிரி இந்த சீசன்ல முதல் ஆளா ஜெயிலுக்குப் போனதும் குக்குதான்! ஜெயிலுக்குப் போகும்போது கூட அழுகாம, யார்கிட்டேயும் சண்டை போடாம அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கிட்டு அங்கேயும் தன்னால என்டர்டெயின் ஆக என்ன பண்ண முடியுமோ அதை பண்ணினதும் அக்ஷயா தான். அப்படி இருக்கும்போது அக்ஷயா எப்படி வீக் ஆக இருக்க முடியும்?
நாங்க ரொம்ப மிடில் கிளாஸ் பேமிலிதான். எங்க குடும்பத்துல மீடியாவுக்குள்ள போறேன்னு சொன்னப்ப ஆரம்பத்தில் எனக்கே சப்போர்ட் பண்ணல. அக்ஷயாவுக்கு எப்படி சப்போர்ட் பண்ணியிருப்பாங்க?
அவளும் நிறைய போராட்டத்துக்குப் பிறகுதான் இந்தத் துறைக்குள் வந்தா. படிப்பை நிறுத்திட்டு நடிப்புல கவனம் செலுத்துறேன்னு தான் என்கிட்ட சொன்னா. படிப்பும் முக்கியம்னு சொல்லி நான் தான் அவளை டிகிரி முடிக்க வச்சேன். அவளுடைய கடின உழைப்பும், திறமையும், விடாமுயற்சியும் தான் இந்த பிக்பாஸ் வாய்ப்புக்கு காரணம். அக்ஷயா அட்ஜெஸ்ட் பண்ணிக்க மாட்டேன்றாங்கன்னு சொல்றாங்களே, இதே அக்ஷயா தான் ஆரம்பத்தில் நடிக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்ல கேரவன் கூட இல்லாம கிடைக்கிற இடத்துல டிரஸ் மாத்தியிருக்காங்க. அதே மாதிரி கையில அடிபட்டு இன்ஜுரி ஆனப்ப கூட அதோட ஆறு மாசம் ஒரு படத்துல நடிச்சா. அவ்ளோ தூரம் அட்ஜெஸ்ட் பண்ற பர்சன். இத்தனை வெரைட்டி ஆஃப் மக்களை அவ பார்த்ததேயில்ல. அவங்களை எப்படி டீல் பண்ணனும்னு அவளுக்குத் தெரியல. அக்ஷயாவிற்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி யாரும் இல்ல. அக்ஷயாகூட சரவணன் நின்னாலுமே புரிதலோட சொல்லிக் கொடுக்கிற மாதிரி அங்க குக்குவுக்கு ஆள் இல்ல!” என்றதும் அக்ஷயா எத்தனை நாள் தாக்குப்பிடிப்பார்னு நினைக்கிறீங்கன்னு கேட்டோம்.
“யாராலும் கெஸ் பண்ணவே முடியாது. நான் கிட்டத்தட்ட 75 நாட்கள் வரைக்கும் இருக்கலாம்னு நினைக்கிறேன். ஃப்ரீஸ் டாஸ்க்கிற்காக நான் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நான் வீட்டுக்குள்ள போய் அக்ஷயாகிட்ட பேசிட்டு வந்த பிறகு அவ விளையாடுற கேம் வேற மாதிரி இருக்கும். எல்லாரும் நீ நீயாக இருன்னு தான் எங்க வீட்ல அக்ஷயாகிட்ட சொல்லி அனுப்பினாங்க. ஆனா, இந்த கேம்ல அப்படி இருக்கக் கூடாது. வாய்ஸ் அவுட் பண்ணி சத்தமா பேச வேண்டிய இடங்களில் சத்தமா பேசித்தான் ஆகணும். டாமினேட் பண்ணித்தான் ஆகணும்.
நான் பிக்பாஸை சினிமாவாகத்தான் பார்க்கிறேன். அதை சினிமாவாகப் பார்த்தா நாம விளையாடிட்டு வந்துடலாம். அங்க யாரும் ஒரிஜினல் கேரக்டராக வாழல. கேமிற்காக சில விஷயங்கள் பண்றாங்க. குக்குகிட்ட தெளிவா எல்லாத்தையும் சொல்லுவேன். நான் சொல்றதை அவளும் புரிஞ்சிப்பா. இங்க யாரும் நல்லவங்களும் இல்ல, கெட்டவங்களும் இல்ல. எல்லாமே சூழல்தான்! மாயாவுடைய ஆர்ட் மீது குக்குவுக்கு மரியாதை இருக்கு. அதனால அவங்க தப்பு பண்ணும்போதும் நாம எப்படி அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறதுன்னு சொல்ல தயங்கியே தப்பை சுட்டிக்காட்டாம விட்டுடுறா. அவளை எனக்குத் தெரியுங்கிறதனால என்னால அதை புரிஞ்சிக்க முடியுது.
லாங்குவேஜ் பிரச்னை இல்ல பேச நினைக்கிறதை உடனே அந்த இடத்துலேயே சொல்லிடுன்னு சொல்லிக் கொடுப்பேன்! அதுக்காகத்தான் இப்ப வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!” என்றவர் அவரது அடுத்தகட்ட புராஜக்ட் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
“வசந்தபாலன் சாருடைய இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிச்சிருக்கேன். தவிர, மலையாளத்தில் ஒரு படத்தில் நெகட்டிவ் லீட் ஆக நடிச்சிருக்கேன். தமிழிலும் ஒரு பெரிய புராஜக்ட்டில் கமிட் ஆகியிருக்கேன். சீக்கிரம் அந்தப் படத்துடைய ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப் போகுது!” என்றார்.
+ There are no comments
Add yours