ஆரம்பம் முதல் முடிவுவரை தனது அப்பாவித்தனமான முகபாவங்களால் பார்வையாளர்களை ஈர்க்கிறார் திப்புவாக நடித்திருக்கும் ராஜ்குமார் ராவ். அப்பா பாபு டைகர் மாதிரி ஒரு ரவுடியாகிவிடக்கூடாது, நேர்மையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதில் உறுதியாக உழைக்கிறார். ஆனால், வழக்கமான கதைபோல, அவரை வன்முறை ‘வா அருகில் வா’ என வரவழைத்துவிடுகிறது. காதலில் கரைந்துபோக துடிக்கும் திப்புவை மோதலில் முண்டியடிக்க வைத்துவிடுகிறது அவரது சூழல், என்பதை மிக இயல்பாகக் காட்டுகிறது திரைக்கதை.
ஆங்கிலத்தில் காதல் கடிதம் எழுதி வாங்குவது, தனது, வருங்கால மாமனாரிடமிருந்து பறிக்கப்பட்ட அபினை தன் காதலிக்காக திரும்பக் கேட்டு சோட்டா காஞ்சியிடம் கெஞ்சுவது, போலீஸின் அபின் குடோனுக்குள்ளேயே திருட முயல்வது என காமெடி துப்பாக்கியால் டிஷ்யும் செய்துகொண்டே இருக்கிறார். காமெடி ஒருபக்கம் வன்முறை ஒருபக்கம் என இரண்டையும் சமாளித்து ஒரே நேர்க்கோட்டில் பக்குவமாகப் பயணிக்கிறார் ராஜ்குமார் ராவ்.

கடைசிவரை காதலைச் சொல்லாமலே நம்மையும் காதலிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார் டீச்சர் சந்திரலேகாவாக வரும் டி.ஜே.பானு.
“பொண்ணா பொறந்திருந்தா வாரிசாக்கியிருக்கமாட்டாரா?” என ஏக்கத்தோடு கேட்பது, “சொல்லிக்கிட்டே இருக்கேன் என்கிட்ட பேசுடா” என்ற ஆவேசத்துடன் டாக்டரிடம் வன்முறையில் ஈடுபடுவது, “அப்புறம் சாப்பிடுறேன்” என்கிற நண்பனின் மனைவியிடம் “பொண்டாட்டின்னா என்ன அடிமையா? எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இப்பவே சாப்பிடு” என்று சாப்பிட வைக்க முயற்சி செய்வது, எஸ்.பி. மிஸ்ராவின் ப்ளானைக் கண்டுபிடித்து உஷார் ஆவது என எந்த நேரத்தில் என்ன செய்யப்போகிறாரோ என மிரள வைத்திருக்கிறார் சோட்டு காஞ்சியாக நடித்திருக்கும் ஆதர்ஷ் கௌரவ்.