இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் திருச்செல்வம். சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `எதிர்நீச்சல்’ தொடரின் இயக்குநர்! இந்தத் தொடர் தற்போது ஞாயிற்றுக்கிழமை வரை என வாரத்தின் ஏழு நாள்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரை ஷூட்டிங் இல்லாத ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம்.

`எதிர்நீச்சல்’ திருச்செல்வம்

‘மெட்டி ஒலி – 2’ வரப்போகிறதா சொல்றாங்களே… ஒருவேளை வந்தா அதுல நடிப்பீங்களா?

“‘மெட்டி ஒலி – 2’ வரப் போகுதான்னு எனக்கும் தெரியாது. அதுசார்ந்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் தெரியல. நானும் எல்லார் மாதிரியும் செய்திகளாகத்தான் கேள்விப்பட்டேன். எனக்கு நடிக்கணும் என்கிற ஆர்வமெல்லாம் கிடையாது. ‘மெட்டி ஒலி’யிலேயே திருமுருகன் ரொம்ப வற்புறுத்தி நடிக்க வச்சார். மூணு மாசம் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் சொன்னதாலதான் நடிச்சேன். நான் தொழில்முறை நடிகர் கிடையாது. ‘கோலங்கள்’ பண்ணும்போதுகூட நான் நடிக்கிறதா இல்ல. அப்பவும் மெயின் கேரக்டர் பண்ண வேண்டாம்னுதான் ப்ரெண்ட் ரோலில் நடிச்சேன். அந்தக் கேரக்டர் பின்நாளில் முக்கியமாகிடுச்சு. பழைய மாதிரி இயல்பான சீரியல்கள் வரணும்னு விரும்புறேன்.”

‘கோலங்கள்’ தொடர் அனுபவம்?

“‘கோலங்கள்’ மிகப்பெரிய டிராவல்னே சொல்லலாம். அந்த டிராவல் போய் நிற்கும்போது கிட்டத்தட்ட ஏழு வருஷமாகிடுச்சு. அப்பவும் அந்தத் தொடரை முடிக்காம இருந்திருக்கலாம். ஆனா, அது சரியான இடமாகத் தெரிஞ்சது. அந்த முடிவு சரியா இருக்கும்னு தோணினதாலதான் அந்தத் தொடரை அப்ப முடிச்சோம். அந்தத் தொடர் கொடுத்த அனுபவம் ரொம்பவே பெருசு. ஆக்டிங், டைரக்டஷன் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுறது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. சீன்ல இருப்பேன்… ஆனா, அதை மறந்துட்டு ரோல் ஆக்‌ஷன் சொல்லுவேன். பிறகு, ‘நீங்க சீன்ல இருக்கீங்க சார்’ன்னு சொல்லுவாங்க. டைரக்டர்தான் பெரிய அளவுல டாமினேட் பண்ணுற விஷயமா இருக்கும். டைரக்டராக எப்படி வியர்வையோடு எதார்த்தமா இருந்தேனோ அப்படியே போய் தான் தொல்காப்பியனாக அந்தத் தொடரில் நடிச்சேன். ஆர்ட்டிஸ்ட் ஆக மெயின்டெயின் பண்ணுற விஷயங்கள் எல்லாம் நான் பண்ணினதில்ல. இயல்பா போய் நின்னு நடிச்சேன். ஆடியன்ஸும் அந்தத் தொல்காப்பியனை ஏத்துக்கிட்டாங்க.”

`எதிர்நீச்சல்’ திருச்செல்வம்

‘எதிர்நீச்சல்’ ஜீவானந்தம் பற்றிச் சொல்லுங்க?

“இந்தக் கேரக்டர் பொறுத்தவரைக்கும் கம்யூனிச சிந்தாந்தங்களைக் கடைப்பிடிக்கிற ஆளா, இல்ல வேற ஒரு ஆளா என்கிற சந்தேகம் இருக்கும். இதை கேமியோ ரோலாகத்தான் வச்சிருந்தோம். எல்லாரும் இந்தக் கேரக்டரை தொல்காப்பியனோட நீட்சியா பார்க்கிறாங்க.”

‘எதிர்நீச்சல்’ சீரியல் குறித்து?

“எதிர்நீச்சலுக்குக் கிடைச்ச வெற்றி நேர்மையான வெற்றி! என்னை நான் ஒரு ஸ்ட்ராங் ஆன ரைட்டராக நம்புறேன். 4 மருமகள்கள் குறித்து எழுதும்போதே அவங்க நான்கு பேரும் கடைசி வரைக்கும் அதே ஃபீலோடதான் பயணிப்பாங்கன்னு முடிவு பண்ணியிருந்தேன். அவங்களுக்குள்ள சின்ன, சின்ன முரண் இருக்கும். ‘கோலங்கள்’ தொடரில் ஆழ்ந்து பார்த்தா அந்தக் கதாபாத்திரங்கள் குறித்துத் தெரியும். ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கும்.

நான் தஞ்சை மாவட்டம் என்பதால் அங்க நான் பார்த்து கவனிச்ச பெண்களுடைய அடுப்படி விஷயங்களைத்தான் இந்த சீரியல் கதாபாத்திரங்களுக்காக வச்சேன். அங்க அடுப்புல நின்னு பேசுற அக்காக்கள் புத்தகங்களை விமர்சிக்கிறதும், ஆண்களைக் கிண்டல் அடிக்கிறதுமா இருப்பாங்க. ரேணுகா, நந்தினி கதாபாத்திரங்களுக்கு அறிவு ரீதியாகவும் புரிதல் இருக்கும், நகைச்சுவை உணர்வும் இருக்கும். அப்படித்தான் அந்தக் கேரக்டர்களை வடிவமைச்சிருக்கேன்.

மூத்த மருமக கொஞ்சம் மெச்சூர்டான அதிகம் பேசாத கேரக்டராகவும், நான்காவது மருமகள் அதிகம் பேசாத கேரக்டராகவும் வச்சிருக்கேன். அவங்க எல்லாருமே நல்ல குணாதிசியம் கொண்டவங்க! ஆனாலும் அவங்களுக்குள்ள வித்தியாசம் இருக்கும். இது நான் பார்த்து வியந்த கதாபாத்திரங்களிலிருந்து நான் எடுத்துக்கிட்ட விஷயங்கள்தான்!”

`எதிர்நீச்சல்’ திருச்செல்வம்

ஶ்ரீவித்யாவின் எழுத்து இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம்… அது குறித்துச் சொல்லுங்க?

“‘கோலங்கள்’ பண்ணும்போது 13 வயசு பொண்ணா ஸ்கூல் போயிட்டு நேரா ஷூட்டிங் வருவாங்க. அப்படித்தான் எனக்கு தெரியும். அதுக்கப்புறம் நல்ல ஃபேமிலி ஃப்ரெண்ட். இப்ப அவங்க என்னில் பாதின்னே சொல்லலாம். வேலைக்காக மட்டுமல்ல… உணர்வு ரீதியாகவும் சொல்றேன். வேற என்ன வேலை செய்தாலும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் செய்வோம்.

அவங்களுக்கு ஆரம்பத்தில் ரைட்டிங் பற்றின புரிதல் பெருசா இல்ல. ஆனா, ஆர்ட்டிஸ்ட்னா ஒருகட்டத்துக்கு மேல போர் அடிச்சிடும். ஒரு பெண், ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல இதைப் பத்திப் பேச ஆரம்பிச்சா, அவங்க லைஃப்லாங் நல்லா இருப்பாங்கன்னு சொல்லி ரைட்டிங் டிரை பண்ணச் சொன்னேன். அவங்க ஒரு தோழி என்கிற முறையில் சொன்னேன். ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸில்தான் முதன்முதலா ரைட்டிங்னு வந்தாங்க. அதுல எழுதுங்கன்னு சொன்னப்ப ஆரம்பத்தில் தயங்கினாங்க. எனக்கு அரசியல் சார்ந்த நையாண்டியாக இருக்கட்டும், எமோஷனல் ஆக இருக்கட்டும் எல்லாமே நல்லா வரும். ஆனா, பெண் சார்ந்த நுணுக்கங்கள் ஒரு பெண் எழுதுற மாதிரியான ஃபீல் வராதுங்கிறது உண்மை.

அவங்க முதன்முதலில் எழுதும்போதே பயங்கர ஆச்சரியமா இருந்தது. எதார்த்தமா ஒரு பெண்ணோட மனநிலையை பிரதிபலிச்சாங்க. எப்படி எழுதுனீங்கன்னு கேட்டப்ப நான் அந்த இடத்தில் இருந்தா இதுதான் பண்ணியிருப்பேன்னு எதார்த்தமா பதில் சொன்னாங்க. அது எனக்குப் பிடிச்சிருந்தது. நாங்க இதுக்காக தனியா மெனக்கெடுறது இல்ல. கதையா பேசும்போது நடக்கிற உரையாடல்கள்தான். அதுல அவங்க புரிஞ்சுகிட்டு எழுதிடுவாங்க.”

இன்னும் பல விஷயங்கள் குறித்து திருச்செல்வம் நம்மிடையே பகிர்ந்துகொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *