அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘ஜவான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லி, ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, அனிருத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியிடம், ‘ஜவான்’ படத்தின் மூலம் உங்களுக்குக் கிடைத்த அன்பைப் பற்றிக் கூறுங்கள் என்று தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் இதை கேட்காதீர்கள். ஷாருக்தான் நிறைய அன்பைப் பெற்றிருக்கிறார். சென்னையில் வெளியான முதல் நாளிலேயே அவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கவில்லை.
நிறைய பேர் எனக்கு போன் செய்து, ஜவானின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று சொன்னார்கள். அந்தளவிற்கு மக்கள் ஷாருக்கானை நேசிக்கிறார்கள். ஷாருக்கான் என்ற பெயரே போதும். அவர் நடந்து கொள்ளும் விதம், மனிதர்களை நடத்தும் விதம் என அன்பை மட்டுமே தருகிறார்” என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார்.
இந்தப் பாராட்டிற்கு நகைச்சுவையான பாணியில் பதிலளித்த ஷாருக்கான், “நானும் உங்களை நேசிக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நாம் திருமணம் செய்துக்கொள்ளலாம். இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடிப்போம்” என்றார். அதற்கு விஜய் சேதுபதி, “அதில் ஒன்றும் தவறில்லை சார்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours