முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் இன்று.. தமிழக அரசு சார்பில் மரியாதை..!

Estimated read time 1 min read

சென்னை:

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.. எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக அரசுசார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதன் சுருக்கம் இதுதான்: முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

திட்டங்கள்

1977 முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவி வகித்தார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.

கருணாநிதி

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் முத்தமிழறிஞர் கலைஞருடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். அவரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார். அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் என் அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்” என்று நட்புணர்வோடு குறிப்பிட்டார்.

பிறந்த நாள்

மேலும், சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப்பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரின் திருவுருவச்சிலையினையும் 1998-ம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார். முன்னாள் முதல்-அமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், அவரின் 105-வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக

அதேபோல, அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: தமிழ் இன எழுச்சியில் அக்கறை கொண்டோர் உருவாக்கிய இயக்கத்தை அழிக்க அராஜகம் செய்த, ஊழலும், சுயநலமும் கொண்ட தீய சக்திகளை எதிர்த்து துணிச்சலாக போராடியவர் எம்ஜிஆர். தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றியவர்.

கோட்டை

அவரது வழியில் அவரையே தன் மாதா, பிதா, குரு, தெய்வமாக ஏற்று வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில், வீரம், விவேகத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ‘கார்ப்பரேட்’ தேர்தல் பிரசாரம் செய்து, வெற்றி பெற்று வந்துள்ள, திமுகவின் குடும்ப ஆட்சியை வேரறுக்க வேண்டிய நேரம் இது. கோட்டையில் நம் கொடி பறந்திடச் செய்வோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours