சேலம்:

மேட்டூர் அடுத்த கொளத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது.
இந்த கூட்டுறவு சங்கத்தில் 1,101 விவசாயிகள் பயிர் கடன் பெற்றிருந்தனர். இவர்களில் 976 பேர் பெற்றிருந்த ரூ. 11 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் 20.01.2021 முதல் 26.01.2021 வரை 125 விவசாயிகள் பெற்றிருந்த பயிர் கடன் தள்ளுபடி செய்யவில்லை .

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி சேலம் மற்றும் நாமக்கல் மாவட் டங்களுக்கு விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ. 500 கோடி ரூபாய் அறிவித்திருந்தார் . இந்த அறிவிப்பிலும் 125- விவசாயிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனை கண்டித்து இன்று கொளத்தூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை 100-கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை ரத்து செய்யக்கோரியும், குளறுபடி செய்த அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வங்கி அதிகாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கொளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராமசாமி கூறுகையில் இந்த சங்கத்தில் பணிபுரியும் வங்கி அதிகாரிகள், 125 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஆவணத்தை மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்து குளறுபடியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பயிர் கடன் தள்ளுபடி சலுகையை பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். எனவே உடனடியாக அரசு தலையிட்டு பயிர்க்கடனை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அசம்பாவிதங்களை தடுக்க டி.எஸ்.பி, விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *