சேலம்:
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள், முன்மாதிரி முயற்சியாக நடமாடும் அலுவலகம் அமைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்
”உங்கள் தேவைகளை அறிய, உங்களை தேடி” என்ற முழக்கத்துடன் அருள் முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சேலம் மேற்கு
சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாமகவை சேர்ந்த அருள் ராமதாஸ். இவர் தனது தொகுதி முழுவதும் நடமாடும் அலுவலகம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதாவது, மாருதி ஈகோ வேனுக்குள், லேப்டாப், பிரிண்டர், டைப்பிஸ்ட், என அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்கி அதை தொகுதி முழுவதும் உலா வரவிட்டுள்ளார்.
மொபைல் அலுவலகம்
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தேடி மக்கள் வராமல் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கின்றன. வீதியில் காய்கறி வாங்குவதை போல், தங்கள் பகுதிக்கு வரும் எம்.எல்.ஏ.வின் மொபைல் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர் சேலம் மேற்கு தொகுதி மக்கள். இதனிடையே நடமாடும் அலுவலகம் மூலம் தன்னிடம் பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை வைக்கும் மக்களுக்கு அந்த நிகழ்விடத்திலேயே சுடச்சுட கடிதம் தயாரித்து அதை பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கிறார்.
முதல் முறையாக
தமிழகத்திலேயே முதல்முறையாக மொபைல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது சேலம் மேற்கு தொகுதியில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொகுதிகளில் எல்லாம் தாங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுக்க கால் கடுக்க மக்கள் காத்திருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டிய நிலைக்கு மத்தியில், பாமக எம்.எல்.ஏ.வின் இந்த வித்தியாசமான முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நவீன வசதி
இன்னும் அந்தக் கால நடைமுறையையே பின்பற்றாமல் தமிழகத்தின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பாமக எம்.எல்.ஏ. அருள் ராமதாஸை போல், காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். ஓட்டுக் கேட்க வீதி வீதியாக சென்றதை போல் மக்கள் குறைகளை கேட்கவும் வீதி வீதியாக செல்லும் அருள் எம்.எல்.ஏ.வை பாமக தலைமை அழைத்து பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours