சேலம்:

சேலத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2021-22 நிதியாண்டில் இதுவரை ரூ. 661 கோடி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கியாளர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சி மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் செ. கார்மேகம் பேசியது:

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு கடன் உதவி திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அதனை தர மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் வங்கி கடன் பெற்றுத் தந்து குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களை தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடன்களைப் பெற்று முறையாக திரும்பிச் செலுத்தி வருகின்றனர். மாவட்ட வங்கிகளும் குழுக்களுக்கு அதிக கடன்களை வழங்கி வருகின்றனர்.

எனவே இத்திட்டத்தின் மூலம் வங்கிகளுக்கு வருடந்தோறும் சிறந்த வங்கிகள் தேர்வு செய்து வங்கி விருது மற்றும் வங்கி கிளை விருதுகளை வழங்கி பெருமைபடுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாக வங்கிகள் மற்றும் குழு உறுப்பினர்களின் இடைவெளியைக் குறைக்கவும், இத்திட்டத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கவும், ஒவ்வொரு வருடமும் இப்பயிற்சியானது நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் வங்கியின் பங்கு, கூட்டமைப்பின் பங்கு, குழுவின் பங்கு இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்களை தெளிவாக விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கிராமப்புறத்தில் 11, 281 குழுக்கள், நகர்ப்புறத்தில் 4,014 குழுக்கள் என மொத்தம் 15, 295 குழுக்கள் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2021-22 ஆம் ஆண்டில், அக்குழுக்களுக்கு வங்கிக் கடனாக ரூ. 900 கோடி குறியீடாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாளது நாள் வரை ரூ. 661 கோடி எய்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் குழுவிற்கு அதிக கடன்களை எவ்வாறு வழங்குவது, ஆவணங்களை எவ்வாறு குறைத்து பெறுவது, தரமதிப்பீடு வழிமுறைகள் மற்றும் கடனை திரும்பிச் செலுத்தும் வழிமுறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன என்றார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான கே. செல்வம், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் (நிதி உள்ளாக்கம்) பாஸ்கர். உதவி திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) சத்யவதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *