டெல்லி:
ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக தன்னை சந்தித்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் தற்போது கொரோனா 3-வது அலை வீசுவதாக டெல்லி அரசு அறிவித்திருந்தத. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிர்வாலுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவட்டிருந்தார். ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தன்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் பாஜக எம்.பி மனோஜ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5மணி வரையிலான முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள், கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
+ There are no comments
Add yours