நீலகிரி:
உதகமண்டலத்தில் கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. உறைபனியால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகத் துவங்கியுள்ளன. உதகையில் தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. பச்சை புல்வெளிகளில் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிப்பதைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சற்றே ஓய்ந்துள்ளது. அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. பகலில் வெயிலடித்தாலும் மாலையில் குளிர் நீடிக்கிறது. நீலகிரியில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது.
வெள்ளை மழை
ஊட்டியில் நேற்று காலை உறைபனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், அவலாஞ்சி, அப்பர்பவானி போன்ற பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. நேற்று காலை பனி கொட்டி கிடந்ததால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளித்தது.
தேயிலை செடிகள்
உறைபனியால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கியுள்ளன. தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். மலை காய்கறிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
வெள்ளை புல்வெளி
ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது தாவை, கோத்தகிரி செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குளிர்காயும் மக்கள்
தலைக்குந்தா, அரசு தாவரவியல் பூங்கா, எச் பி எஃப்,உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பசேலென காட்சியளிக்கும் மைதானங்கள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் உறை பனி படர்ந்து காணப்படுகிறது.கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நெருப்பை மூட்டி உறை பணியை சமாளித்து வருகின்றனர். குறிப்பாக தலைக் குந்தா பகுதியில் O செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது இதனால் இதுவரை இல்லாத கடும் குளிர் நிலவுகிறது
வெள்ளை மழையை ரசிக்கும் மக்கள்
இதனால் அதிகாலை வேளையில் பணியை மேற்கொள்ளும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புல்வெளிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல காணப்படும் உறை பனியை காண சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவிந்து வருகின்றனர். வெள்ளை மழை பொழிந்த இடங்களில் உற்சாகமாக புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.
+ There are no comments
Add yours