புதுக்கோட்டை;
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே மூலைக்கு மூலை நடைபெறும் கஞ்சா விற்பனை கிறங்க வைக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் நடந்த கொலைச் சம்பவங்களும் கஞ்சாவை மையப்படுத்தியே நடந்திருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க, கஞ்சா விற்பனைக்குத் துணைபோனதாகப் புதுக்கோட்டையில் ஏட்டு, எஸ்.ஐ உட்பட இரண்டு போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களோடு சேர்த்து, கஞ்சாவைக் கட்டுப்படுத்த வேண்டிய ஆய்வாளர்கள் உட்பட இன்னும் சில காக்கிகளும் கூட்டுச் சேர்ந்து தொடர்ந்து, இயங்கி வருவதாக எழுந்துள்ள புகார் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அக்டோபர் 30ம் தேதி.., புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அருகிலேயே, கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஜானகி என்ற பெண்ணை சுற்றி வளைத்துக் கைது செய்தது திருச்சி டி.ஐ.ஜி தலைமையிலான தனிப்படை.
வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக அவர் வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான 140 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். ஜானகியோடு, அவரின் உறவினர்கள் 7 பேரையும் அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். கடந்த 8 வருடங்களுக்கும் மேலாகவே, இங்குள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜானகி, ஆரம்பத்தில் கஞ்சாவைச் சில்லறைக்கு வாங்கி வந்து விற்பனை செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பல மாவட்டங்களுக்கும் மொத்த சப்ளை செய்யத் துவங்கியிருக்கிறார். தனது எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆரம்பம் முதலே தங்குதடையின்றி ஒவ்வொரு மாதமும் மாமூலைக் கொடுக்கும் ஜானகி, போலீஸார் துணையுடனேயே கஞ்சா விற்பனையைத் தங்கு தடையின்றி நடத்தி வந்திருக்கிறாராம். இந்த நிலையில் தான், தற்போது தனிப்படை போலீஸாரின் வசம் சிக்கியிருக்கிறார்.
இதுபற்றி தனிப்படை போலீஸார் ஒருவரிடம் கேட்டபோது,
“ஜானகி கடந்த சில வருடங்களாகவே இங்குள்ள பகுதிகளில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். குறிப்பாக, கடந்த சில மாதங்களில் ஆங்காங்கே வீடு எடுத்துத் தங்கி, புதுக்கோட்டையில் சில்லறையாகவும், வெளி மாவட்டங்களுக்கு மொத்தமாகவும் சப்ளை செய்து வந்துள்ளார். ஆந்திராவிலிருந்து வாகனங்களில் கடத்திக் கொண்டு வரும் கஞ்சாவை, ஒரு வீட்டிற்குள் பதுக்கி, அங்கிருந்து தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் மொத்தமாக சப்ளை செய்து வந்துள்ளார். ஆரம்பத்தில் கணவருடன் சேர்ந்து மட்டுமே விற்பனை செய்திருக்கிறார்.
கஞ்சாவை மாற்றிவிடுவதில், நல்ல வருமானம் கிடைக்க, மகள், மருமகனையும் இந்தத் தொழிலுக்குள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்துள்ளார். அதன்பின்பு மகள், மருமகன் என ஒரு குடும்பமாகவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
ஆங்காங்கே வீடு வாடகைக்கு எடுத்து இல்லத்தரசி போலவே தங்கும் ஜானகி, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார். அங்குள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் தென்பட்டு விட்டால், உடனே வீட்டை மாற்றி விடுகிறார். புதுக்கோட்டையிலிருந்து கஞ்சா மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பப்படுவதாகத் தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வரும் வாகனங்களைக் கடுமையாகச் சோதனைக்குட்படுத்தி, ஸ்கெட்ச் போட்டு ஜானகி தூக்கப்பட்டிருக்கிறார். ஜானகி தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
கடந்த 8 வருடங்களுக்கும் மேலாகக் கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறந்த ஜானகி மீது, புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஒரே வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாகக் கடந்த 2020-ல் ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்திருக்கின்றனர்.
திருக்கோகர்ணம், கணேஷ் நகர் உள்ளிட்ட இவர் தங்கிய இடங்களில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சரியாக மாமூலைக் கொடுத்து வந்திருக்கிறார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஜானகி பிடிபடுவதற்கு முன்பு ஒரு மாதங்களுக்கும் மேலாக, திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு எதிலிலேயே வைத்து கஞ்சா விற்பனையை நடத்தி இருக்கிறார் என்பது தான் வேதனையின் உச்சம்.
தொடர்ந்து, இப்படி அதிகளவிலான கஞ்சாவை ஜானகி மாற்றிவிடுவதற்குப் பின் இருக்கும் சோர்ஸை தனிப்படை ஆய்வு செய்த போது தான், திருப்புனவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துக்குமார், நகர் எஸ்.ஐ சந்திரசேகர் ஆகியோர் ஜானகியுடன் அடிக்கடி, செல்போனில் பேசியதுடன், கஞ்சா விற்பனைக்கும் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, கையும் களவுமாகச் சிக்கியிருக்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி கடந்த காலங்களில் பணியாற்றிய பல போலீஸாருக்கும் ஜானகி மற்றும் அவரின் மருமகனுடனும் தொடர்பு வைத்திருக்கின்றனர். தற்போது உள்ள போலீஸாரும் தொடர்பு வைத்துக் கொண்டு லட்சங்களில் வருமானம் பார்த்திருக்கின்றனர், சிலர், ஜானகியிடம் பர்சென்ட் கணக்கில் கேட்டு வசூல் வேட்டை நடத்தி இருப்பதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.
இதுபற்றி பேசிய மூத்த போலீஸ்காரர் ஒருவர், “கிட்டத்தட்ட 33 வருஷமாக பணியிலிருக்கும் சந்திரசேகர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தான், எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்றார். க்ரைமில் இருக்கும் இவர், கஞ்சா வியாபாரி, லாட்டரி சீட்டு வியாபாரிகள், மது வியாபாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு மாதம் ஒரு பெரும் தொகையை வசூலித்துவிடுவாராம்.
கடந்த காலங்களில் தனது காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும், நகை கொள்ளைச் சம்பவங்களில், நகைகள் முழுமையாக மீட்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதியே தான் கிடைக்குமாம். இப்படித் தான் கடந்த சில வருடங்களில் தனது சொத்துக்களின் மதிப்பையும் உயர்த்திருக்கிறார்.
புதுக்கோட்டை திருவரங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், மொபைலில் இருந்த போதே, சரக்கு வியாபாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு மாமூல் வசூலிப்பதில் கில்லாடி. ஜானகியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழக்கத்தைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனைக்குத் துணை போகியிருக்கிறார்” இதோடு, சமீபத்தில் கஞ்சா பதுக்கல் தொடர்பாக, நடவடிக்கை எடுக்காத திருமயம் எஸ்.ஐ ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆலங்குடியில் பணிபுரிந்த உளவுப்பிரிவு காவலர் ஒருவரும் கஞ்சா வியாபாரிகளுக்குத் துணை போனதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் சிலர் இப்போதும் கஞ்சா வியாபாரிகளுக்குத் துணை போகிக்கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி மாவட்டத்தில் நடக்கும் கஞ்சா வியாபாரம் பல போலீஸாரின் ஒத்துழைப்போடு போலீஸாருக்கு தெரிந்து தான் நடக்கிறது” என்றார்.
இதற்கிடையே தான் நகர காவல் நிலையத்தில் பணி செய்யும் குரு நாதன், நகர் எஸ்.ஐ அன்பழகன், திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கணேஷ் நகர் போலீஸார் சிலரும் தற்போதும் கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.
புதுக்கோட்டை அம்பாள்புரம் 1-ம் வீதி அருகே இருக்க, தனியார் கல்யாண மண்டபம் பக்கத்துல, ஒரு பாழடைஞ்ச வீட்டுக்கிட்ட வச்சு கஞ்சா வியாபாரம் போலீஸாருக்கு தெரிஞ்சே நடக்குது. இதுபத்தி கம்ப்ளைண்ட்டா சொன்னாலும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கிறதில்ல..,சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் அதிகாரிங்களுக்குச் சரியா மாமூல் போயிடுறதால நடவடிக்கை எடுக்க மாட்றாங்க.” என்று கடந்த வாரம் பெயர் கூற விரும்பாத அந்தப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, மேலே சொன்ன விஷயத்தின் (புகாரின்)வீரியத்தை நமக்கு உணர்த்தியது.
இதுபற்றி டி.ஐ.ஜி சரவண சுந்தரிடம் பேசியபோது,
“திருச்சி சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்டத்திற்கு ஒரு தனிப்படை என மொத்தமாக 6 தனிப்படைகள் அமைத்து, வாகனத் தணிக்கை, தொடர் ரோந்து எனத் தீவிரமாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
குறிப்பாக, கஞ்சாவைக் கட்டுப்படுத்த க்ரைம் செய்கிறவர்களின் சோர்ஸ் யாரோ அவர்களைப் பிடிக்கும் வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது. ஜானகி கேஸ் தொடர்பாக, சோர்ஸ்களை ஆய்வு செய்த போது, இந்த கேஸில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக உறுதி செய்த பின்பு தான் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். தற்போது துறை ரீதியான விசாரணை நடக்கிறது. தொடர்ந்து, இதுபோன்ற தீவிரமான நடவடிக்கைகள் தொடரும். தற்போதும், சில புகார்கள் வருகிறது. தொடர்ந்து, காவலர்கள் வேறுயாரும் உடந்தையாக இருந்திருக்கின்றனரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். காவலர்கள் யார் ஈடுபட்டிருந்தாலும், தயங்க மாட்டோம்.
கண்டிப்பாக அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் எவிடன்ஸும் அவசியம். ஏற்கெனவே, போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, கஞ்சா போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கஞ்சா, போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகளவில் நிகழ்வுகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
+ There are no comments
Add yours