மதுரை:
மதுரை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் டாக்டர் ரகுபதி ராகவன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 42). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி டாக்டர் பிரீத்தா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மருத்துவர்
மதுரையில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை என்பதால் ஊருக்குச் சென்ற கார்த்திகேயன், குடும்பத்தினருடன் விடுமுறையைச் செலவிட்டார். இதையடுத்து அவர் இன்று காலை மீண்டும் பணிக்குச் செல்வதற்காக மதுரைக்கு தனது காரில் புறப்பட்டார்.
உரசி சென்ற அரசு பேருந்து
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையாபட்டி விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் கார் மீது உரசியதாகக் கூறப்படுகிறது. உடனே அந்த அரசு பஸ்சை மறிப்பதற்காகக் கார்த்திகேயன் அந்த பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அப்போது ரோட்டின் நடுவில் இருந்த சென்டர் மீடியன் மீது கார் பயங்கரமாக மோதியது.
பயங்கர விபத்து
அதே வேகத்தில் கார் பறந்து சென்று எதிர்த் திசையில் காரைக்குடியில் இருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி சொருகியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த கார்த்திகேயன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுத்தனர்,
உயிரிழப்பு
இதையடுத்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து போராடி காரில் சிக்கி இருந்த டாக்டர் கார்த்திகேயன் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்த செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
சிசிடிவி
காட்சிகள் காண்போர் நெஞ்சைப் பதைபதைக்கும் அந்த சிசிடிவி காட்சியில், அரசு பேருந்து பின்னால் இருந்து வரும் சிவப்பு நிற கார் பேருந்தை மறிக்க முயல்வதாகத் தெரிகிறது. இருப்பினும், அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த கார், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனை தாண்டி பாய்ந்துள்ளது. அப்போது எதிர்புறமும் வந்த அரசு பேருந்து மோதி இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சாலையோரம் இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-இல் தெளிவாகப் படமாகியுள்ளது.
+ There are no comments
Add yours