‘லாக்கர் சாவிகள், லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்குகள்..’ தங்கமணி ரெய்டு 2.0இல் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.,

Estimated read time 0 min read

சென்னை:

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பரப்புரை சமயத்திலேயே ஊழல் ஒழிப்பு என்பது தான் திமுக சார்பில் அனைத்து இடங்களிலும் வலுவாக முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, அப்போதைய அதிமுக அரசை கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என ஸ்டாலின் கடுமையாகச் சாடியிருந்தார். அதிமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் மிகப் பெரியளவில் ஊழல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய திமுக, ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரப்புரை சமயத்திலேயே உறுதி அளித்தனர்.

திமுக அரசு

தேர்தலுக்குப் பின்னர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதனால், அந்த சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலேயே அதிகம் கவனம் செலுத்தப்பட்டதால், முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது. அது எல்லாம் முடிந்த உடன் முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் அனைத்தும் புகார்கள் தூசி தட்டப்பட்டன.

அடுத்தடுத்து சோதனை

இதில் முதலில் சிக்கியவர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர். கடந்த ஜூலை மாதம் அவருடன் தொடர்பில் இருந்த இடங்களில் சோதனை நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை. அதன் பிறகு எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

தங்கமணி

இந்த்ச சூழலில் அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 30 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ₹2.30 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்கம், வெள்ளி 40 கிலோ, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், அவர் கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்ததாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதைத் தங்கமணி மறுத்திருந்தார்.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்

இதனிடையே முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் சோதனை நடத்தியுள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை. நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளில் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்கள் வழக்கு விசாரணை முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

என்ன வழக்கு

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாகத் தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours