நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தமது மகள் உயிருடன் இருப்பதாக, சிபிஐக்கு ஊடகவியலாளர் இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஊடகவியலாளரான இந்திராணி முகர்ஜி, தமது முதல் இரண்டு கணவர்களை விவாகரத்து செய்துவிட்டு, பீட்டர் முகர்ஜி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். தமது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவும், மூன்றாவது கணவரின் முதல் தாரத்து மகனான ராகுல் முகர்ஜியும் காதல் வயப்பட்டுள்ளனர்.
இருவரும் சகோதர உறவு முறை வருவதால், இந்திராணி முகர்ஜி இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், ஷீனா போரா காதலில் உறுதியாக இருந்ததால், ஆத்திரமடைந்த இந்திராணி முகர்ஜி, தமது இரண்டாம் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷ்யாம் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு ஷீனா போராவை கொலை செய்து எரித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், ராகுல் முகர்ஜி அளித்த புகாரின் பேரில், மூன்றாண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி 2015 முதல் மும்பை பைகுலா சிறையில் கழித்து வருகிறார்.
மகள் கொலை வழக்கில், சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில், திடீரென இந்திராணி முகர்ஜி, சிபிஐ போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், தமது மகள் ஜம்மு-காஷ்மீரில் உயிருடன் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தம்முடன் சிறையில் இருக்கும் பெண் ஒருவர் காஷ்மீரில் ஷீனா போராவை பார்த்ததாக இந்திராணி முகர்ஜி கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
+ There are no comments
Add yours