சென்னை:
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தேர்தலுக்கு முன்பே தீவிர பிரசாரம் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை.
வெளிப்படையான குரல்
அமைச்சரவை மாற்றம் செய்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று தொடந்து பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சமீபகாலமாக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சிலரும் இந்த கோரிக்கையை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் சமீபத்தில் இந்த கருத்தினை முன்வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
இந்த பேச்சுகளை உண்மையாக்கும் வகையில் மூத்த அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வரப்படுகிறார்.
தமிழர்களின் விருப்பம்
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் நிருபர்களிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ” உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்’ என்று கூறினார்.
மிக நெருங்கிய நண்பர்கள்
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் சிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவிஏற்கும் போது, பதவியேற்பு விழாவில் அமர்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் அதனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போதே இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours