*இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்தியா, முக்கிய போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து களம் காண்கிறது*

நடப்பு இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்திய அணி, பாகிஸ்தான் நியூசிலாந்து ஆகிய அணிகளுடனான அடுத்தடுத்த இரு போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ளது. பல்வேறு விதமான விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள இந்திய அணி அழுத்தமிக்க சூழலில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து 3ஆவது போட்டியில் களம் காண்கிறது. அரையிறுதிக்கு முன்னேற மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ள நிலையில் தொடரில் இரு வெற்றிகளை ருசித்து அதிக நெட் ரன்ரேட்டுடன் உள்ள ஆப்கானுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்வரிசை, மத்திய வரிசை இரண்டுமே பொலிவிழந்து காணப்படுகிறது. கேப்டன் கோலியின் ஃபார்ம் மட்டுமே ஆறுதலை அளிக்கிறது. மிரட்டலான, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ரோகித், ராகுல், பந்த், பாண்ட்யா உள்ளிட்டோரும் அதிரடி காட்டத் திணறுகின்றனர். பந்து வீச்சிலும் பும்ராவைத் தவிர மற்ற வீரர்கள் விக்கெட் வீழ்த்த சிரமம் கண்டுள்ளனர்.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்தியா சுணக்கம் கண்டுள்ள நிலையில், துணிச்சலான பேட்டிங் மற்றும் துடிப்பான பந்து வீச்சால் ஜொலிக்கும் ஆஃப்கானிஸ்தான் கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆபப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் பந்துவீச்சின் போது பவர் பிளேவில் முஜிபுர் ரகுமான், முகமது நபி ஜோடியும், மிடில் ஓவர்களில் ரஷித் கானும் எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். நவீன் உல் ஹக்கின் துல்லிய யார்க்கர்களும், ஹமித் ஹசன், குல்புதீன் நைப் ஆகியோரின் விவேகமான பந்துவீச்சும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ஷஷாய், ஷாஷாத் ஜோடி ஆப்கானுக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து வருகிறது. அனுபவம் மிகுந்த அஸ்கர் ஆஃப்கன் ஓய்வு பெற்றிருப்பது ஆப்கானிஸ்தானுக்கு அணிக்கு பேட்டிங்கில் சிறுபின்னடைவே. இருப்பினும் குர்பாஸ், ஆல்ரவுண்டர்கள் நபி, நைப், ரஷீத் ஆகியோர் பேட்டிங்கிற்கு கூடுதல் வலு சேர்க்கின்றனர்.

ஆட்ட ரீதியாகவும், மன ரீதியாகவும் தொய்வு அடைந்துள்ள இந்திய அணி, சர்வதேச போட்டிகளில் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்று மீட்சி பெறுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *