NIA : ஹிஜாப்பால் இந்து-முஸ்லீம் மாணவர்கள் நட்பில் பிளவு.. கவலைப்படும் விஹெச்பி! என்ஐஏ விசாரணைக்கு கோரிக்கை..!

Estimated read time 1 min read

பெங்களூர்:

ஹிஜாப் பிரச்சனையால் ஹிந்து-முஸ்லிம் மாணவிகள் ஒருவரையொருவர் வித்தியாசமாக பார்க்கும் நிலை உள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும்” என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் துவங்கியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்தன. ஹிஜாப்புக்கு போட்டியாக சிலர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹிஜாப் அணிய தடை

இதையடுத்து கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும், கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

சதிச்செயல்

இந்நிலையில் ஹிஜாப் பிரச்சனையில் சதிச்செயல் இருப்பதாக கர்நாடகத்தில் பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில பஜ்ரங்தளம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுனில் கூறுகையில், ‛‛ஹிஜாப் பிரச்னைக்கு பின்னால் சதிச்செயல் உள்ளது. இதனால் ஹிஜாப் ஜிகாதி என அழைக்கிறோம். இந்த பிரச்னைக்கு பின்னால் வேறுசில அமைப்புகள் தொடர்ந்து இயங்குகின்றன. இதனால் தான் இதுபற்றி பேசவேண்டிய நிலை உள்ளது. பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சீருடை அணிய வேண்டும்” என்றார்.

என்ஐஏ விசாரணை

இதேபோல், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த பூர்ணிமா சுரேஷ் கூறுகையில், ‛‛ஹிஜாப் அணிந்து மாணவிகள் தங்களை வேறுபடுத்தி காட்ட முயற்சிக்கின்றனர். இதன்மூலம் பிளவை ஏற்படுத்துகின்றனர். இதனால் இது ஜிகாத். ஹிந்து, முஸ்லிம் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட நிலையில் தற்போது ஒருவரையொருவர் வித்தியாசமாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஹிஜாப் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் அனுமதிக்க கோருகிறார்கள். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை வேண்டும்” என்றார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஹிஜாப் வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் பிப்.,14 முதல் மாநிலத்தில் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று பியூ, டிகிரி கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மாணவிகள் வித்தியாசமாக பார்க்கின்றனர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours