சென்னை:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நிலத்திற்குள் நுழைந்து பின்னர் வலுவிழந்து வருவதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கனமழை நாளை முதல் குறைய வாய்ப்புள்ளது. இன்றைய மழைப்பொழிவு ஆந்திராவில் அதிகமாக இருக்கும். சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நீக்கம் செய்யப்பட்டுள்ளது
சென்னையில் 30 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 70.9 செ.மீ. மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், 1918ம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 செ.மீ. மழை பெய்தது தான் சாதனையாக இருந்தது.
இதனையடுத்து, 2005ல் 107.8 செ.மீ.யும், 2015-ல் 104.9 செ.மீ. அளவு நவம்பரில் சென்னையில் மழை பெய்துள்ளது. சென்னையில் நவம்பர் மாதத்தில் 100 செ.மீ.க்கு அதிகமான மழை 1918, 1985, 2005, 2015 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டுமே பொழிந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவதற்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே 70.9 செ.மீ. மழை கிடைத்துவிட்டது. எஞ்சியுள்ள 19 நாட்களில் நிச்சயம் மழைப்பொழிவு 38 செ.மீ.க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….
+ There are no comments
Add yours