கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு காரணமாக உலகளவில் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 13 கோடி பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியிருப்பதாக கூறும் உலக சுகாதார நிறுவனம், இவையாவும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் உலக சுகாதார நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் நடந்த நேரலை கலந்துரையாடலில் பேசிய மருத்துவர் மஹூமத் தெரிவிக்கையில், “தடுப்பூசிகளின் பயன்பாடு பெரியளவில் இருக்கும் சூழலிலும், 5 லட்சத்துக்கும் மேலான இறப்புகள் பதிவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பலரும் ஒமைக்ரான் மிகவும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றது என்று நினைப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற நிலை, துக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். இதுவரை ஒமைக்ரானால் மட்டும் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒமைக்ரான் குறித்த விழிப்புணர்வு, அனைவருக்கும் கட்டாயம் தேவை” எனக்குறிப்பிட்டுள்ளார். ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மையுடன் இருப்பதாக குறிப்பிடும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள், அதனாலேயே இது டெல்டாவைவிட வேகமாக பரவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் இதுகுறித்து தெரிவிக்கையில், “ஒமைக்ரான் பற்றிய தோராயமான எண்ணிக்கையே நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. துல்லியமான கணக்குகள் இன்னும்கூட அதிகமாக இருக்கலாம். அதனால்தான் `இப்போதுவரை நாம் இன்னும் கொரோனாவை கடக்கவில்லை, இப்போதும் கொரோனாவின் பாதி நிலையில்தான் நாம் எல்லோரும் உள்ளோம்’ என நாங்கள் கூறுகிறோம். இன்னும் பல நாடுகள் தங்களின் ஒமைக்ரான் உச்சத்திலிருந்தே விடுபடவில்லை. முந்தைய அலை கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய தாக்கங்களையெல்லாம், ஒமைக்ரான் மிஞ்சி வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக பதிவாகிவரும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கைகள், கணிசமாக உயர்ந்தவண்ணம் உள்ளன. அது எங்களுக்கு மேலும் அச்சுறுத்தலை தருகிறது. இந்த கொரோனா வைரஸ், இன்னும்கூட தீவிர பாதிப்புகளை வரும் நாள்களில் ஏற்படுத்தக்கூடும்” என்றுள்ளார்.
கடந்த வாரம் மட்டும் உலகளவில் 68,000 பேர் கொரோனா இறப்புகள் பதிவாகியிருப்பதாக கூறும் உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் துறை, இது அதற்கு முந்தைய வாரத்தை விடவும் 7% அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது உயரும் அதேநேரத்தில் கொரோனா உறுதியாவோர் எண்ணிக்கை, 17% கடந்த வாரத்தைவிடவும் குறைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்மூலம், ஒமைக்ரானின் தீவிரத்தன்மை அதிகரித்திருப்பதாக தாங்கள் உணர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தினசரி கொரோனா எண்ணிக்கையிலும், இதை நம்மால் உணர முடியும். ஆம், இந்தியாவில் தொற்று உறுதியாவோர் எண்ணிக்கைதான் வேகமாக குறைகிறதே தவிர, இறப்பு எண்ணிக்கை இன்றளவும் 1,000-த்தை கடந்தே இருக்கிறது.
கொரோனாவின் ஒமைக்ரான் திரிபுகளின் அடிப்படையை உலக சுகாதார நிறுவனம் ஆய்வுசெய்தபோது, அதில் பி.ஏ.1 என்ற உட்பிரிவுதான் இப்போது வேகமாக பரவுகின்றது என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து பி.ஏ.2-வும் ஒமைக்ரான் பரவலை வரும் நாள்களில் தீவிரப்படுத்தலாம் என கணிக்கிறார்கள் அவர்கள். இருப்பினும் தற்போதைக்கு அதை உறுதியாக சொல்ல முடியாது என சொல்லும் உலக சுகாதார நிறுவன அறிவியலாளர்கள், வரும் நாள்களில் இதுகுறித்து முழு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவருக்கு பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 என இரு உட்பிரிவு கொரோனாவும் ஒருவரை தாக்குமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்துவருகிறது. ஒமைக்ரானின் ஒரு உட்பிரிவின் திரிபேவும் (பி.ஏ.1-தான் இப்போது தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், இரு திரிபுகளும் ஒருவருக்கு ஏற்பட்டால், நிலைமை எப்படி ஆகுமோ என்ற அச்சமும் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா உருமாற்றத்தில் ஒமைக்ரான் வைரஸ் கடைசியாக இருக்காது என்றும், இதற்கு அடுத்த திரிபு தீவிரத் தொற்றுத் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மருத்துவர் மரியா வான் கெர்கோவ் வெளியிட்டுள்ள தகவலில், இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது என்ற அவர், மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற மரியா, அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றார். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என்ற அவர், எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றும் கூறினார்.
+ There are no comments
Add yours