திருப்பூர்: குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
திருப்பூர் கருவம்பாளையம் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மூர்த்தி (46). கூலித் தொழிலாளியான இவரின் மனைவி கோமதி (38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உண்டு. மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி சண்டையும் சச்சரவுமாய் இருந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இரவும் மூர்த்தி குடி போதையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போதும் அவர் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் கோபமடைந்த மூர்த்தி கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தினார். அதைத் தடுக்கச் சென்ற தனது மாமியார் ஜோதி (58) என்பவரையும் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி இறந்தார்.
படுகாயத்துடன் ஜோதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதர், கொலை குற்றத்துக்காக மூர்த்திக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அத்துடன் கொலை முயற்சி குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை மூர்த்தி ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.