கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் மேற்கு வங்க அரசியல் விவாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. ‘மேற்கு வங்க அரசு, கொல்கத்தா வழக்கை சரியாக விசாரணை நடத்தவில்லை, அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்’ என பா.ஜ.க உள்ளிட்ட மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்தன. மேற்கு வங்க அரசு, விசாரணையை முடிக்க ஐந்து நாள்கள் அவகாசம் கேட்டிருந்தது. அதையும் கடந்து நடத்தப்பட்ட போராட்டத்தால், இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தாரை, அந்த சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு சந்தித்தேன். நான் ஐந்து நாள்கள்தான் அவகாசம் கேட்டேன். ஆனால். உயிரிழந்த மருத்துவருக்கு உடனடியாக நீதி வேண்டும் எனப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
அதனால், அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு அனுப்பப்பட்டது. சி.பி.ஐ-க்கு வழக்கு அனுப்பப்பட்டு, 16 நாள்கள் ஆகிவிட்டன். உயிரிழந்த மருத்துவருக்கு நீதி எங்கே… எதிர்க்கட்சிகளுக்கு நீதியெல்லாம் தேவையில்லை… தாமதம்தான் வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் மரண தண்டனை விதிக்கும் படியான சட்டம், மேற்கு வங்க, சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்படும்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டம் மாணவர் அமைப்புகளால் திட்டமிடப்பட்டது என்று அமைப்பாளர்கள் கூறியிருந்தாலும், இது கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பா.ஜ.க – ஏ.பி.வி.பி-யால் பின்னப்பட்ட சதி. பிணங்கள் வேண்டும் என்பதற்காக பா.ஜ.க பந்த் அழைப்பு விடுத்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். பா.ஜ.க பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்கும் இலக்கிலிருந்து விலகி, இப்போது மேற்கு வங்கத்தை அவதூறு செய்கிறார்கள்.
வெட்கமற்ற பா.ஜ.க பெரும் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறது. தாக்குதலுக்கு ஆளான போதிலும், சதி வலையில் விழாமல், உயிரிழப்புகளைத் தடுத்த காவல்துறைக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கான தனிப்பட்ட மசோதாவை எங்கள் கட்சி முன்வைக்கும். நாட்டில் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. முழு இந்தியாவும் நீதியைக் கோருகிறது.
ஆனால் சிலர் அதை வைத்து பிண அரசியல் செய்கிறார்கள். உன்னாவ், ஹத்ராஸ், கதுவா, பத்லாபூர் போன்ற அவர்கள் தொடர்புடைய வழக்குகள் என்னவானது…? இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சி.பி.ஐ ஏன் இன்னும் கைது செய்யவில்லை.” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
+ There are no comments
Add yours