Kolkata Doctor Rape-Murder Case: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும், அச்சம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இனி நாட்டில் வசிக்கும் மகள்களுக்கு எதிரான இவ்வாறான குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்
நாகரீக சமுதாயத்திலும் இத்தகைய கொடுமைகள் அனுமதிக்க முடியாது -திரௌபதி முர்மு
கொல்கத்தா பலாத்காரம் சம்பவம் குறித்து பேசுகையில், ‘போதும் போதும்’ என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார். எந்த நாகரீக சமுதாயத்தில் தன் மகள்கள் மற்றும் சகோதரிகள் மீது இத்தகைய கொடுமைகள் அரங்கேறுவதை அனுமதிக்க முடியாது. மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தியபோது, மற்ற இடங்களில் குற்றவாளிகள் இன்னும் சுற்றித் திரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். சமூகம் விழித்துக்கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
செய்தி ஊடகமான பிடிஐக்கு அளித்த பேட்டியில், குடியரசுத் தலைவர் முர்மு, இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டவர்கள் பெண்களை ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள் என்று கூறினார். நம் மகள்களின் பயத்தைப் போக்குவதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை முதலில் நீக்குவது நமது கடமையாகும் என்றார்.
கொல்கத்தா பலாத்காரம் சம்பவம் இதுவரை நடந்தது என்ன?
ஆகஸ்ட் 9: கொல்கத்தாவின் RG KAR மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் முகத்திலும் உடலிலும் பல காயங்களுடன் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கொல்கத்தா போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ‘பெண் தற்கொலை செய்திக்கொண்டார்’ எனக் கூறியுள்ளனர். பின்னர் இரவு, தலா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 10: பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராயை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கு பின் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு போராட்டங்கள் வெடித்தன. ஐஎம்ஏ மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ஆகஸ்ட் 11: கொல்கத்தாவில் மருத்துவமனை வளாகத்திற்குள் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 12: ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவி விலகல் கோரிக்கையைத் தொடர்ந்து தனது பதவியில் இருந்து விலகினார்.
ஆகஸ்ட் 13: கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, குற்றவாளிகளை காவலில் எடுத்தது விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 14: 25 பேர் கொண்ட சிபிஐ குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டன பேரணியை அறிவித்தார்
ஆகஸ்ட் 15: ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெரிய கும்பல் நுழைந்து அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் நர்சிங் நிலையத்தை சேதப்படுத்தியது.
ஆகஸ்ட் 16: ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நாசவேலையில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பல பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் தொடர்பு இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
ஆகஸ்ட் 17: இந்த விவகாரத்தில் பிரதமார் தலையீட வெட்நும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்தது’. மேலும் நாடு தழுவிய டாக்டர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஆகஸ்ட் 18: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொள்வதாக கூறியது. ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆகஸ்ட் 19: ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் தொடர்ந்து நான்காவது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாலிகிராப் சோதனை நடத்த உள்ளூர் நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் 20: இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மருத்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய நெறிமுறையை உருவாக்க 10 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்து. மேற்கு வங்க மாநில அரசு மற்றும் கொல்கத்தா காவல்துறையிடம் நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
ஆகஸ்ட் 21: ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நாசவேலையில் ஈடுபட்ட மூன்று அதிகாரிகளை கொல்கத்தா காவல்துறை சஸ்பெண்ட் செய்தது. ஆர்.ஜி .கர் மருத்துவமனையின் பாதுகாப்பை சிஐஎஸ்எப் பொறுப்பேற்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ஆகஸ்ட் 22: இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாக கொல்கத்தா காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இயற்கைக்கு மாறான மரணம் அடைந்ததாக தகவல் தலா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது எப்படி? எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்… இது மிகவும் கவலை அளிக்கிறது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியது. அடுத்த விசாரணையில் ஆஜராகுமாறு காவல் உதவிக் கண்காணிப்பாளரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டதுடன். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு வலியுறுத்தியது.
சுப்ரீம் கோர்ட்டின் கோரிக்கையை ஏற்று டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் சம்பவத்தன்று பணியில் இருந்த நான்கு ஜூனியர் டாக்டர்களுக்கு பாலிகிராப் சோதனை நடத்த சிபிஐ கோரியது.
ஆகஸ்ட் 23: மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் (AIIMS), ஆர்எம்எல் (RML) மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்என்ஜேபி (LNJP), மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஜிடிபி (GTB) மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவமனை உள்ளிட்ட குடியுரிமை மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, குடியுரிமை டாக்டர்கள் சங்கம் (FORDA) மற்றும் அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) இந்த முடிவை எடுத்தன. கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு பாலிகிராப் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆகஸ்ட் 24: முக்கிய குற்றவாளிகள் மற்றும் 6 பேர் மீதான உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது. முக்கிய குற்றவாளிகளுக்கு பாலிகிராப் சோதனைகள் சிறையில் நடத்தப்பட உள்ளன. அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த நான்கு மருத்துவர்கள் மற்றும் ஒரு சிவில் தன்னார்வலர் உட்பட மீதமுள்ள ஆறு பேர் ஏஜென்சி அலுவலகத்தில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
ஆகஸ்ட் 25: கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் சஞ்சய் ராயிடம் சிபிஐ பொய் சோதனை நடத்தியது. ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், முன்னாள் எம்எஸ்விபி சஞ்சய் வசிஸ்ட் மற்றும் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 பேரின் வளாகத்தில் சிபிஐ சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியது.
ஆகஸ்ட் 26: மம்தா பானர்ஜியின் ராஜினாமாவைக் கோரி ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடத்தப்பட்ட ‘நபன்னா அபிஜன்’ அணிவகுப்புக்கு பாஸ்சிம் பங்கா சத்ர சமாஜ் அழைப்பு விடுத்தது.
ஆகஸ்ட் 27: ஹவுராவில் உள்ள மேற்கு வங்க செயலகத்தில் உள்ள நபன்னாவிற்கு எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. மறுபுறம் நூற்றுக்கணக்கான ஊர்வலக்காரர்கள், முக்கியமாக இளைஞர்கள், முதல்வர் ராஜினாமா செய்யக் கோரி, நகரம் முழுவதும் இரண்டு இடங்களில் இருந்து ‘நபன்னா அபிஜன்’ பேரணியை தொடங்கினார்கள்.
போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசியதால், அது வன்முறையாக மாறியது. எம்ஜி சாலை, ஹேஸ்டிங்ஸ் சாலை மற்றும் சந்த்ராகாச்சி மற்றும் ஹவுரா மைதானத்தில் உள்ள பிரின்ஸ்ப் காட் அருகே உள்ள பகுதிகளில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில போராட்டக்காரர்களும் போலீசாரும் காயமடைந்தனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கி மற்றும் தடியடி நடத்தினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours