மதுரை:
உசிலம்பட்டி அருகே பெண்சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி – கௌசல்யா தம்பதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி பிறந்த பெண் குழந்தை உயிரழந்தாக வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. தம்பதியினருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் இது பெண் சிசுக் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும், 21ஆம் தேதி பிறந்த பெண் குழந்தை ஐந்து நாட்களிலேயே இறந்து, வீட்டின் அருகே புதைக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து விஏஓ முனியாண்டி, சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துப்பாண்டி – கௌசல்யா வசிக்கும் வீட்டிற்கு விசாரணைக்காக காவல்துறையினர் சென்றபோது, பெற்றோர்கள் அங்கு இல்லை, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. பெற்றோர்கள் தலைமறைவானதை அடுத்து இந்த சம்பவத்தில் பெண் சிசுக் கொலை தொடர்பான சந்தேகம் அதிகரித்துள்ளது. எனவே, காவல்துறையினர் தங்கள் விசாரணையையும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.
பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்படி, சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கூடுதல் காவல் துணைக் காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான போலிசார் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
வட்டாச்சியர் ரவிச்சந்திரன், விஏஓ முணியாண்டி மற்றும் சமூக நலத்துறையின் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயா தலைமையிலான அலுவலர்கள் முன்னிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பெண் சிசு புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனர். இந்த உடற்கூறு ஆய்வு முடிவுகள் மருத்துவ குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்த பின்பு, மேலதிக தகவல்கள் தெரியவரும்.
குழந்தை பெண்ணாகப் பிறக்கும் என அறிந்தால், அல்லது பெண்ணாகப் பிறந்தால் அந்தக் குழந்தையைக் கருக்கலைப்பது அல்லது கொலை செய்வதை பெண் சிசுக் கொலை என்று கூறுகிறோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உசிலம்பட்டியில் பெண் சிசுக்கள் கொல்லப்படும் விவகாரம் பெரிய அளவில் வெடித்தது நினைவிருக்கலாம். பெண் குழந்தைகளை விரும்பாததற்கான காரணம் சமுதாய மற்றும் பொருளாதார ரீதியிலானவை. அதோடு, மதச் சார்புடைய நிகழ்வுகளுக்கு ஆண் குழந்தையே வாரிசாக கருதப்படுவதால் பெண் குழந்தைகளை அதிகம் விரும்புவதில்லை.
+ There are no comments
Add yours