சென்னை:

தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் சில அதிர்ச்சி தரவுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இருப்பினும் அப்போது வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைய தினம் (டிச.29) 739 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. புதன்கிழமை (டிச. 28) காட்டிலும் 120 பேருக்கு கூடுதலாக வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் 27,02,588 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று 8 பேர் உயிரிழந்துள்ளார். குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் 294 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தலைநகர் சென்னை

கடந்த டிசம்பர் முதல் வாரம் தலைநகர் சென்னையில் 1088 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது டிச. 2ஆம் வாரம் 987ஆக குறைந்திருந்தது. இருப்பினும், 3ஆம் வாரம் இது 1039ஆக உயரத் தொடங்கியது. குறிப்பாக இந்த கடைசி வாரம் 1720 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கடிதம்

அதில் கொரோனா பாதிப்பை கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுவதாக, அதாவது வைரஸ் பாதிப்பைக் கண்டறியக் கூடுதலாக 2 நாட்கள் வரை ஆவதாக ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என்றும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நோய் பரவலைத் தடுக்கவும் கொரோனா பாதிப்பை கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ராஜேஷ் பூஷண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்

சென்னையில் வைரஸ் பரவலைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் RT-PCR, RAT உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொரோனா சோதனை, தொடர்பில் இருந்தோரை கண்டறியும் முறை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை முறை, வழிகாட்டு நெறிமுறைகளை, கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றுவது ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை

புதிய உருமாறிய ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் தலைநகர் சென்னைக்கு மட்டும் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *