சென்னை:
திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை உட்பட பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் பத்து திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (28.12.2021) சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அவர்கள் பேசும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் 650 க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பபாக 450 க்கும் மேற்பட்ட திருக்கோயில் திருப்பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு பணிகள் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு வருகின்றது. மேலும், அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு அறிவிப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.
1000/- ஊக்கத் தொகை ரூ. 3000/- ஆக உயர்த்தி வழங்கும் திட்டம், போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை நடைபெறுவதற்கு ஏதுவாக வைப்பு நிதியினை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை ரூபாய் 1 கோடியிலிருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தி வழங்கியும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியம் ரூ.3 கோடியிலிருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பக்தர்களின் நலன்கருதி இந்து சமய அறநிலையத்துறை துரிதமாக செயலாற்றி வருகிறது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மாண்புமிகு முதல்வரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்தபட்டு வருகிறது. உள்துறை வாயிலாக வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க 3087 திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை அமைக்க ரூ.308.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வடபழனி முருகன் கோவிலில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு அறை அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா நோய் தொற்று எவ்வாறு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் ஒமைக்ரான் நோய்த்தொற்றும் நிச்சயம் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்பார்கள்.
பழநி, திருச்செந்தூர், சமயபுரம் போன்ற முக்கிய திருக்கோயில்களில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை உட்பட பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் பத்து திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும், திருத்தணி, திருவரங்கம், திருவேற்காடு, சமயபுரம் உட்பட 10 திருக்கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதம் வழங்குவதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம் ஆகியவை சுத்தமான முறையில் தயார் செய்து வழங்கப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours