தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தையே பெரும் வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர மக்கள் வெள்ளத்தால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.
தமிழக அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளார்.மேலும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். முற்பகல் 11.52 மணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வந்த அதே விமானத்தில்தான் நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் ரஜினிகாந்த் தனது சொந்த பணிகளுக்காக கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. ‘ரஜினி 170’ படபிடிப்புக்காக அவர் கன்னியாகுமரி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது தென்மாவட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.