இந்த எபிசோடில் கமலின் அட்டகாசமான நகைச்சுவை கவுன்ட்டர்களும், கூர்மையான வார்த்தைகளில் கோர்க்கப்பட்ட இதமான உபதேச உரைகளும் நன்று. யெஸ்… Kamal is back! சினிமா ரசிகர்கள் முதல் நாளில் வீடியோவில் சொல்லும் வேடிக்கையான விமர்சனங்கள் தொடர்பாக கமல் நடித்துக் காட்டியது சுவாரஸ்யமான காட்சி. ஒட்டுமொத்த சபையும் விழுந்து விழுந்து சிரித்த தருணம் அது.
அதை விடவும் ரவீனாவின் அம்மாவின் முன்பாக மணி அடித்த அந்தர்பல்டி சமாச்சாரங்கள் சிரிக்க வைப்பதாகவும் ‘க்யூட்’ ஆகவும் இருந்தன. இந்த மணி இத்தனை நாள்களாக எங்கே போனார்? அதிர்ச்சி வைத்தியம் தந்த ஆன்ட்டிக்கு ஒருவகையில் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
“இன்று விவசாயிகள் தினம். ஏழு மாதங்களே பிரதமராக இருந்தாலும் சரண்சிங் அவர்களைப் போல் விவசாயிகளுக்கு ஆதரவு தந்தவர் வேறு யாருமில்லை. அவரது நினைவாக அனுசரிக்கப்படுகிற தினம். வீட்டிற்குள் பார்த்தால் குடும்பத்தின் பலம் தெரியும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ன்னு சொன்ன கணியன் பூங்குன்றனார் மரபுல வந்தவங்க நாம். ஆனா இன்னிக்கு வீட்டைத் தாண்டினா எதிர் வீட்டைப் பிடிக்காது. ஏரியா தாண்டினா பக்கத்து ஏரியாவைப் பிடிக்காது. நாடு தாண்டினா இன்னொரு நாட்டைப் பிடிக்காது. அதனாலதான் பாலஸ்தீன மக்கள் 60 வருஷமா டென்ட்ல வாழறாங்க. வீட்டின் உள்ளே குடும்பத்தார் சந்தித்த போது அவர்களுக்கு ஏற்பட்ட குதூகலம் நமக்கும் கிடைத்தது. அன்பைப் பார்த்து வியப்பதில் தவறில்லை. பொறாமைப்பட்டாலும் தவறில்லை. இந்தச் சந்திப்பு வீட்டில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்று பார்ப்போம்” என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார் கமல்.
‘அர்ச்சனா மத்தவங்க கிட்ட வேலை வாங்கறாங்க’ என்பதை விதம் விதமான சொற்களில் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் மாயா. “என்னைக் கொஞ்சணும்னா கூட அவங்க இடத்துக்கு என்னைக் கூப்பிடறாங்க” என்று சொல்லி சிரித்தார் ரவீனா.
பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த அர்ச்சனா, “சோற்று பாத்திரத்தை தண்ணி ஊற்றி ஊற வைத்திருக்கலாம்” என்று தினேஷிடம் சொன்னது இயல்பான விஷயம்தான். நம் வீடுகளிலும் அப்படித்தான் செய்வோம். அப்போதுதான் மறுநாள் கழுவுவதற்கு எளிதாக இருக்கும். ஆனால் தினேஷோ “அதுக்கு பேசாம நான் கழுவியே வெச்சிடலாம்” என்று மெல்லிய கோபத்துடன் கிண்டலடித்தார். ஆக, வீட்டில் அன்பின் டெம்பரேச்சர் சற்று குறைய ஆரம்பித்திருக்கிறது போல!
குடும்பச் சந்திப்புகளின் அனுபவங்கள்
அகம். கமல் என்ட்ரி. “குடும்பத்தாரைச் சந்திச்சீங்க. சந்தோஷமும் அன்பும் பெருகி ஓடிச்சி. அவங்க சொன்ன எந்த அறிவுரை ஏற்புடையதாக இருந்தது?” என்று ஆரம்பத்திலேயே நேரத்தைக் கடத்தும் டாஸ்க்கை ஆரம்பித்தார். தன்னுடைய அனுபவங்களை முன்னிட்டு கமல் சொல்லும் கருத்துகள் மதிப்பு வாய்ந்தவை மற்றும் சுவாரசியமானவை என்பதில் மறுப்பில்லை. ஆனால் “உங்க அனுபவத்தைச் சொல்லுங்க” என்று ஆரம்பித்து விட்டு இடையிடையில் தன் அனுபவங்களையும் அதில் அதிரடியாக நுழைக்கும் போது பேச வந்தவர்கள் திணறிவிடுவார்கள். அனைவரும் சொல்லி முடித்த பிறகு தொகுப்புரையாக கமல் இறுதியில் பேசினால் நன்றாக இருக்கும்.
“விசித்ரா குழந்தையாவே மாறிட்டாங்க. பூர்ணிமா சோபா பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டாங்க. ஒருத்தர் ஐஏஸ் ஆபிசரா இருந்தாலும் ஏழாங் கிளாஸ் வாத்தியாரைப் பார்த்ததும் பணிவா கையைக் கட்டி நிப்பாங்க. பாலசந்தர் எனக்கு அப்படித்தான். அப்புறமா நடிக்க வர்றவங்க, ‘ஏன் சார்… நல்லாத்தானே பேசறாரு. ஏன் அவரைப் பார்த்ததும் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கறீங்க’ன்னு கேப்பாங்க. அந்தப் பணிவு ஆரம்பத்துல வந்தது. முந்தைய தலைமுறையை விட, இந்தத் தலைமுறை கிட்ட பாசம் அதிகமா இருக்கற மாதிரி தெரியுது. ‘பாசமலர்’ படம்லாம் அதிகம்ன்னு நெனச்சவங்க நாங்க. எங்க அப்பாவை நான் தொட்டுப்பார்த்ததே இல்லை. அவரோட கடைசிக்காலத்துல எதற்கோ எழுந்திருக்கத் தடுமாறும் போது தொட்டுப் பிடிக்கும் போதுதான் அவரோட கை அளவே எனக்குத் தெரிஞ்சது” என்றெல்லாம் பேசினார் கமல்.
பிக் பாஸ் வீட்டின் குடும்பச் சந்திப்புகளில் ஆறாக ஓடிய அன்பு, பாசம் எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் அவை நீண்ட பிரிவுகளுக்குப் பிறகு பொதுவெளியில் நிகழும் விஷயம் என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே அதற்கே உரிய மிகைகளும் பாவனைகளும் நிகழ்ந்தே தீரும். அதுதான் உண்மை என்று நம்புவதற்கு பரந்த மனது வேண்டும். மேலும் கட்டிப் பிடித்து வரவேற்பதெல்லாம் பொதுவாக நம் கலாசாரத்தில் கிடையாது. அது அயல் கலாசாரத்தின் பாவனையான நகல். நிறைய பாசம் இருந்தாலும் அதை சட்டென்று வெளிக்காட்டுவதில் கூச்சம் இருக்கிறவர்களாகத்தான் நாம் இன்னமும் இருக்கிறோம். அது எலீட் சமூகமாகவே இருந்தாலும் வெளியில் காட்டும் பாவனைகள் வேறு. வீட்டிற்குள் மறுபடியும் பிறாண்டல்களும் உரசல்களும் நிகழும். இதெல்லாம் கமலுக்கும் தெரியும். ஆனால் “முந்தைய தலைமுறையை விட இந்தத் தலைமுறையில் பாசம் அதிகமாகத் தெரிகிறது” என்று பாசிட்டிவாகப் பேசுகிறார்.
பிள்ளைகள் பெற்றோரின் சொத்து அல்ல
“எங்க அம்மா டான்ஸ் ஆடி நான் பார்த்ததில்லை. நிறைய வருத்தங்களைத்தான் அவங்களுக்குத் தந்திருக்கிறேன். பிக் பாஸ் வீட்டின் மூலமாக அவங்க டான்ஸ் ஆடினதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி” என்றார் தினேஷ். “தெலுங்கு பேசற அம்மாவிற்கு நான்தான் தமிழ் மொழியைப் பழக்கினேன். ஏன் ஒல்லியாயிட்டே சாப்பிடுன்னு சொன்னாங்க. முதன்முறையாக அவங்க கூட டான்ஸ் ஆடினது மகிழ்ச்சி. வந்திருந்த கெஸ்ட் சொன்ன விஷயங்களை ஏத்துக்கிட்டேன்” என்று மணி பேசும் போதே இடைமறித்த கமல் “அப்படியா?” என்று குறும்பாகக் கேட்க “சில விஷயங்களை ஏத்துக்கிட்டேன். சில கமெண்ட்டுகளினால் அழுதுட்டேன். அண்ணன் மகள் வந்தது ஆறுதலாக இருந்தது” என்று சங்கடமாகச் சிரித்தார் மணி.
“தங்கச்சிகளுக்கு இதுவரைக்கும் நான்தான் அட்வைஸ் பண்ணியிருக்கேன். ஆனா அவங்க எனக்கு அட்வைஸ் பண்ணாங்க” என்று விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே “நம்ம நிலைமை அப்படி” என்று கமல் குறுக்கே அடித்த ஜாலி கவுன்ட்டர் அருமை. (இது போன்ற குறுக்கீடுகள் சுவாரஸ்யமானவை). “எங்க அம்மா எப்பவுமே அட்வைஸ் பண்ணதில்லை. ஏதாவது சந்தேகம் வந்தா கேளுன்னு மட்டும்தான் சொல்வாங்க” என்று விஜய் நிதானமான குரலில் சொன்னதை மனமார்ந்த ஆமோதிப்புடன் ஏற்றுக் கொண்டார் கமல். “பேரன்ட்டிங் நல்ல விஷயம். ஆனால் அதை அதிகாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று அவர் இணைத்தது அருமை.
“ஏழு கடல்… ஏழு மலை தாண்டித்தான் எங்க அம்மா இங்க வரணும்” என்பது மாதிரி மாயா இழுத்தது நெருடல். “உடம்பு முடியாதவங்க. ரொம்ப தொலைவு டிராவல் பண்ணி வந்தது கஷ்டமா இருந்தது” என்று சென்டிமென்ட் கூட்டாமல் சொல்லியிருக்கலாம். “அம்மா வருவாங்கன்னு நெனச்சு ஏமாந்துட்டேன். அண்ணன்லாம் இப்படி எனக்கு அட்வைஸ் பண்ணதேயில்ல. கேம் தனியா ஆடுன்னு சொன்னாங்க” என்று ரவீனா சொல்ல, “அதையெல்லாம் ஏத்துக்கிட்டீங்களா?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் கமல்.
“எல்லோர் வீட்ல இருந்தும் வந்தது ஜாலியா இருந்தது. அப்பா வந்தார். சஞ்சய் வந்தான். இவர் ஏண்டா வந்தாருன்னு அப்பா பத்தி தோணுச்சு. ஆறு மாசம் நாங்க பேசாமயே இருந்தோம்” என்று நிக்சன் பட்டும் படாமல் சொல்ல, “அதான் உங்க நம்பரையே பிளாக் பண்ணிட்டாரே?” என்று கமல் சொன்ன டைமிங் கமென்ட் அருமை.
“பேரண்ட்டிங் பத்தி என் அனுபவத்தைச் சொல்றேன். ஒரு கட்டத்துல பள்ளிக்குப் போக மாட்டேன். நடனம் கத்துக்கப் போறேன்னு சொல்லிட்டேன். சாமி கும்பிட மாட்டேன்ன்னு எல்லாத்துலயும் எதிர்மறை. சராசரி பெற்றோரா இருந்திருந்தா பல்லைப் பேத்திருப்பாங்க. ஆனா என்னோட தகப்பனாரும் மூத்த சகோதரரும் ஆதரவு தந்தாங்க. ‘தப்பா போச்சுன்னா பார்த்துக்கலாம்’ன்னு. ஜிம்னாஸ்ட்டிக் மாஸ்டரை பார்த்திருக்கீங்களா? கிட்டயே வர மாட்டார். ஆனா எப்ப விழுந்தாலும் தாங்கிப் பிடிக்கறதுக்கு தயாரா இருப்பார். வீட்லயே நானா ஸ்டன்ட் கத்துக்கிட்டேன். அதுக்கு மேற்பார்வை என் அம்மாதான். ‘உங்களின் தேவை உங்களின் பிள்ளைக்கு இல்லாமல் வளருங்கள்’ன்றது எனக்குப் பிடிச்ச மேற்கோள். பிள்ளைகளை ரொம்பவும் இறுக்கிப் பிடிக்கக்கூடாது. பூனை தன் குட்டியைப் பிடிக்கறது தெரியுமில்லையா?” என்ற கமல் “பூனைக் குட்டி… புள்ள குட்டி எல்லாமே அப்படித்தான்” என்று நகைச்சுவை முத்தாய்ப்புடன் சொன்னதெல்லாம் அருமையான விஷயங்கள்.
“பாலசந்தர் என்னை அன்பா நாற்பது பக்கத்துக்குப் பாராட்டியிருக்காரு… ஆனா நானூறு பக்கத்துக்கு திட்டியிருக்காரு. விமர்சனம் பண்ணியிருக்காரு. அது பாசிட்டிவான விமர்சனம்… ‘இன்னொருத்தன் சீன்ல மூக்கை நுழைக்காதே. திருடாதே’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு. விமர்சனம்ன்றது அவங்க பாயின்ட் ஆஃப் வியூ. உங்களுக்கு அதுல என்ன உபயோகம்ன்றதை மட்டும் எடுத்துக்கங்க. பகுத்தறிவுன்றது ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல. இதற்கும் பொருந்தும்” என்ற கமல் பிரேக்கி்ல் சென்றார்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை
பிரேக் முடிந்து திரும்பிய கமல் மீண்டும் ஆரம்பித்த தலைப்பு, முந்தைய உரையாடலுக்குத் தொடர்புடையதாக இருந்தது. “வந்தவங்க அறிவுரை சொல்லும் போது ‘வெளில இருந்து ஆயிரம் பேசலாம். உள்ளே இருக்கறது கஷ்டம்’ன்னு இங்க சிலர் சொன்னாங்க. ரவீனாலாம் அமைதியா உக்காந்து இருந்தாங்க. இப்ப தலையை ஆட்டறாங்க. அப்ப ஆட்டலை” என்று சிரித்த கமல் “எந்த அறிவுரை ஏற்புடையதாக இருந்தது, இல்லை?” என்று அடுத்த உரையாடலைத் துவங்கினார்.
“’பேசுகிற வார்த்தைகளில் கவனமா இருக்கணும்’ன்னு எங்க அப்பா சொன்னாங்க. அதை ஏத்துக்கறேன்” என்றார் தினேஷ். இது அவருக்குத் தரப்பட்ட முக்கியமான அறிவுரை. இறுதி வரிசை வரைக்கும் பயணிப்பதற்குத் தகுதியான போட்டியாளர் தினேஷ். ஆனால் பல சமயங்களில் அவர் கொடுக்கும் கடுமையான எதிர்வினைகள் அவருக்கே பாதகத்தை ஏற்படுத்தலாம்.
“நல்லவனா இரு. ரொம்ப நல்லவனா இரு’ன்னு சொன்னாங்க” என்று சிரித்துக் கொண்டே விக்ரம் சொல்ல “ஒரு திருத்தம். ரொம்ப நல்லவனா கூட இருக்கலாம். ஆனா எல்லோருக்கும் நல்லவனா இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கமல் குறுக்கிட்டது சிறப்பானது. “யாரையும் நம்பாதே… உன் பின்னாடி பேசறாங்கன்னு சொன்னாங்க சார்” என்று சங்கடமான சிரிப்புடன் விக்ரம் தொடர, “சாயாதேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். யாரும் இங்க நட்பு நாடி வந்தவர்கள் இல்லை. போட்டியாளர்கள்” என்று விக்ரமிற்குச் சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர் மாயா குழுவைச் சார்ந்திருப்பதை மறைமுகமாக இடித்துரைத்தார் கமல்.
“இங்க நான் பண்ணது எல்லாமே ரியல்தான். கன்டென்டிற்காக எதையும் பண்ணலை. ரவீனா என்கிட்ட சாரி சொல்றதெல்லாம் கேமை பாதிக்காத விஷயம். ஆனா சப்கான்ஷியஸா… நானும் ஏதாவது ஒருவகையில் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்தத் தப்பை ஏத்துக்கறேன்” என்று ரவீனாவின் விருந்தினர் சொன்னதின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டார் மணி. இதுவே விருந்தினர் வருகைக்கு முன்பாக இருந்தால் மணி இப்படி வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பாரா என்று தெரியாது. எனவே ஒருவரின் தவற்றை யாராவது கண்டிப்பான குரலில் சுட்டிக் காட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தக் கண்டிப்பில் கரிசனம் கலந்திருக்க வேண்டும்.
‘நான் எப்ப உங்களைத் திட்டினேன்?” – பூர்ணிமாவைத் திகைக்க வைத்த கமல்
“வீட்ல எங்க அப்பாவுக்கும் எனக்கும் எந்தக் கருத்துமே ஒத்துப் போகாது. ஆனா அவர் சொன்ன ஒரு விஷயம் நல்லாயிருந்தது. உனக்கு யார் மேலயாவது கோபம் இருந்தா, அவங்க செஞ்ச ஒரு சின்ன நல்ல விஷயத்தையாவது ஞாபகப்படுத்திக்கோ. கோபம் தன்னால போயிடும்ன்னு சொன்னாங்க. அம்மா சொன்னது என்னன்னா… ‘நீ எல்லாத்தையும் அப்படியே பேசிடற. பின்னாடி உன்னைக் கிண்டல் பண்றாங்க’ன்னு சொன்னாங்க. அதுக்காக நான் என்னை மாத்திக்க மாட்டேன்” என்று அர்ச்சனா சொன்ன விஷயம் அருமை. “நீ மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருக்காத. உனக்கே அது ரிவர்ஸாகும்ன்னு சொன்னாங்க” என்று விஷ்ணு தனக்குக் கிடைத்த அறிவுரையைப் பற்றிச் சொன்னதும் முக்கியமானது.
“நாமினேஷன் நடக்கறதுக்கு முன்னாடி சண்டை போடாதேன்னு சொன்னாங்க. அதனாலதான் அடிக்கடி நாமினேஷன்ல வந்துடறேன் போல. அப்படில்லாம் பிளான் பண்ணில்லாம் நான் சண்டை போடறதில்லை” என்று விசித்ரா சொன்னதை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார் கமல். “உன்கிட்ட இருக்கற கருணையை அதிகமா காட்டுன்னு சொன்னாங்க” என்றார் மாயா. இது முக்கியமான அறிவுரை. மருத்துவமனை நோயாளிகளிடம் சென்று அவர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும் சேவையை மாயா செய்கிறார் என்றால் அதற்குப் பெரிய கருணையுள்ளம் வேண்டும். ஆனால் பிக் பாஸ் வீட்டில் மாயா நிகழ்த்தும் சில செயல்களும் சொற்களும் அதற்கு முரணாக இருப்பதை அவர் நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
“நட்பை வளர்ப்பதற்கு இது இடமில்லை. அதையெல்லாம் வெளியில் பார்த்துக்கறதுதான் சரி” என்றார் கமல். “வாரயிறுதியில் கமல் சார் திட்டினா… ஏன் டவுன் ஆயிடறன்னு அம்மா சொன்னாங்க” என்ற பூர்ணிமாவின் பேச்சில் குறுக்கிட்ட கமல், “நான் எப்ப திட்டியிருக்கேன்?” என்று ஜாலியாக இடைமறித்தது சுவாரஸ்யம். தொண்டையில் பிளாக் வந்த மாதிரி திகைத்த பூர்ணிமா “திட்டினதுன்னு இல்ல. சொல்றது” என்று மாற்றிக் கொள்ள “நான் நல்லாவே திட்டுவேன். எனக்கு நல்லா வரும். ஆனா நான் அதைப் பண்றதில்லை” என்று சிரித்தார் கமல். “யாராவது எதையாவது சொன்னா டவுன் ஆகறதை மாத்திக்கோ. ஒரு விஷயத்திற்கு விளக்கம் சொல்லிட்டே இருக்காதே. இதையெல்லாம் மாத்திக்கிட்டா டாப் பிளேயரா வர சான்ஸ் இருக்குன்னு சொன்னாங்க” என்று பூர்ணிமா தொடர, “அப்படின்னா இப்ப நீங்க டாப் பிளேயரா நெனச்சுக்கலையா?” என்று கமல் ஒரு கட்டையைப் போட, பூர்ணிமாவிற்கு மீண்டும் தொண்டை அடைத்தது.
“நம்ம சொல்ற விஷயத்துல நமக்கே தெளிவு இருந்தா திகைப்பு வராது. தொண்டை விக்காது” என்பது போல் கமல் சொன்ன விஷயம் முக்கியமானது. நாம் பேசுவதில் நமக்கே தெளிவு இல்லையென்றால்தான் மயக்கமும் தயக்கமும் வரும்.
எல்லாவற்றிலும் குழந்தையாக நடிக்கிறாரா ரவீனா?
அடுத்து எழுந்த ரவீனா, “உன் கேமை கெடுத்து மணி ஆடறதையும் கெடுத்து எல்லோருடைய கேமையும் கெடுத்துடறே. எல்லார் கூடயும் பேசுன்னு அண்ணா சொன்னான். அதை ஏத்துக்கறேன். ஆனா கோபமா சொன்னதை எடுத்துக்கலை. ஏன் நைட்ல போய் பேசிட்டே இருக்கே. மாத்திக்கோன்னு சொன்னாங்க” என்று சொல்ல “அப்படி இருக்கீங்களா?” என்று கேட்டார் கமல். “எனக்கே தெரியலை சார்” என்று ரவீனா வழக்கம் போல் குழந்தை பாவனையில் இழுக்க “உங்களுக்கே தெரிலையன்னா எப்படிங்க” என்று கமல் சிரித்துக் கொண்டே கேட்டது நல்ல நையாண்டி.
சில விஷயங்களில் ரவீனா குழந்தைத்தன்மையுடன் இருப்பது உண்மைதான். ஆனால் அதே பாவனையில் தன் மீதுள்ள எல்லாப் பிழைகளையும் மூடி மறைக்க அவர் நினைப்பது வெளியில் இருந்து பார்க்கும் போது நடிப்பாகத்தான் தெரியும். சில விவாதங்களில் அவர் பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவதைப் பார்த்திருக்கிறோம். எனில் சுயமாக யோசிக்கத் தெரியாத அளவிற்கு அவர் நிச்சயம் குழந்தை கிடையாது. “மணிக்காக நீ நிக்கறே… ஆனா அவர் உனக்காக நிக்கறதில்லன்னு சொன்னாங்க. அது தவறு. அவரு நிறைய விஷயங்களில் எனக்காக நின்னிருக்காரு. கரன்ஸி விஷயத்தில் அவர் எனக்காக நிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று அடுத்த பகுதியில் தெளிவான சாட்சியத்தை ரவீனா தந்தது நல்ல விஷயம்.
“கோபப்படாத. யோசிச்சு பேசு… இந்த ரெண்டு விஷயங்கள் மட்டும்தான் எங்க அப்பா சொன்னாரு. ஏற்புடையதாக இல்லைன்னு எதுவும் இல்லை சார்” என்று நிக்சன் சுருக்கமாக முடித்துக் கொள்ள “அதான் அதுக்குள்ள பிளாக் பண்ணிட்டாரே” என்று கமல் சிரிக்க, சபையும் அதை எதிரொலித்தது.
பிறகு கமல் வழங்கிய தொகுப்புரை நன்று. “பிள்ளைகள் பெற்றோர்களின் தனிப்பட்ட சொத்து இல்லை. அன்பு மட்டும்தான் அங்கு எஞ்சியிருக்கும். பாலசந்தரின் கோபத்திற்குப் பின்னால் அன்புதான் இருந்தது. இன்று அவரது நினைவு நாள். அதனால்தான் தொடர்ந்து அவரைப் பற்றி பேசுகிறேன். எனக்குத் தினமுமே நினைவு தினம்தான். ஒருவரின் கருத்து என்பது உண்மை கிடையாது. நிறைய விமர்சகர்களுக்கு அந்தந்த துறைகளில் பிராக்டிஸ் இருக்காது. சினிமா விமர்சகர்களுக்கு டைரக்ஷன் தெரியாது. ரசிகர்களும் அப்படித்தான்” என்று சொல்லிய கமல், முதல் ஷோ (FDFS) பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்கள் தரும் வேடிக்கையான தோரணைகளைச் செய்து காட்டிய விதத்தில் அட்டகாசமான நகைச்சுவை இருந்தது. போட்டியாளர்கள் உள்ளிட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“எடுத்தவனுக்குத் தெரியும். படம் எப்படின்னு. சில படங்களுக்கு தலைல கை வெச்சுட்டு உக்காந்துடுவோம். ஆனா படம் நல்லா ஓடிடும். சிரிச்சுக்கிட்டே சம்பளத்தையும் பாராட்டையும் வாங்கி வெச்சிக்க வேண்டியதுதான். அது என் தப்புன்னு சொல்ல மாட்டேன். உங்களோட தப்புன்னு விட்டுடுவேன்” என்று கூர்மையான நகைச்சுவையுடன் பேசினார் கமல். “சப்ஜெக்ட் ஹெவியாடக்கூடாதுன்னுதான் என்னை வெச்சே உதாரணம் சொன்னேன்” என்று முன்னெச்சரிக்கையுடன் சொன்ன கமல் பிரேக்கில் சென்றார். ‘அதுக்காக எனனை காமெடி பீஸூன்னு நெனச்சிடாதீங்க’ என்பது அதன் அர்த்தம். குறிப்பாக பூர்ணிமாவிற்கான செய்தியாக இருக்கலாம்.
மோதிரத்தை மீண்டும் மாட்டிவிட்ட ரவீனா
வந்திருந்த ஆன்ட்டி சொன்ன விஷயங்களுக்கு தன் செய்கைகளின் மூலம் மறுப்பு தொிவிக்க ஆரம்பித்திருக்கிறார் ரவீனா. மோதிரத்தை கழற்றி மீண்டும் மணியிடம் அவர் அளிக்க ‘ஐய்யய்யோ’ என்று வெடிகுண்டு போலப் பதறினார் மணி. விஷ்ணு சபையில் சொன்ன சில விஷயங்களுக்காக மாயா எரிச்சலானார்.
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல், இந்த சீசனை ஒப்பேற்றி மேலே தூக்கி விடும் விதமாகப் பேச ஆரம்பித்தார். “என்னுடைய பார்வையில் கடும் போட்டி இருப்பதாக உணர்கிறேன். ஏற்றம் இறக்கம் இருக்கும். வாரக்கடைசியில் இவர் வந்து நல்ல வார்த்தை சொல்வாருன்னு பார்த்தா இவரும் திட்டறாரேன்னு நெனப்பீங்க. (பூர்ணிமாவிற்கு குளோசப்!) ஆனா இந்த ஆறு சீசனை விடவும் அதிகமா இருக்கற ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். அதாவது.… எவ்வளவு வீழ்ச்சி வந்தாலும் உடனே திரும்ப எழுந்து நின்னு ஆட ஆரம்பிச்சிடறீங்க… அதற்கான உந்துசக்தி எது?” என்று அடுத்த தலைப்பை ஆரம்பித்தார்.
“பழைய பேக்கேஜ்களைச் சுமப்பதில்லை” என்றார் தினேஷ். ஆனால் விவாதங்களில் கடுமையாகப் பேசும் போது அப்படித் தெரியவில்லை. “சோர்வாக இருக்கும் சமயங்களில் ஏதாவது வேலை செய்ய ஆரம்பிச்சுடுவேன்” என்றார் விக்ரம். ‘நடனம்தான் எனக்கான உற்சாக பானம்” என்றார் மணி. “நேற்றைய தினத்தில் நடந்ததை மாற்ற முடியாது. நாளைய தினத்தை கணிக்க முடியாது. இன்றைய நாள்தான் என் கையில் இருக்கிறது” என்று காலண்டர் வாசக மேற்கோளை சரியாக ஒப்பித்தார் அர்ச்சனா. “என்னோட தன்னம்பிக்கைதான் உந்துசக்தி” என்று சிரிக்காமல் சொன்னார் விஷ்ணு.
“பாலசந்தோரோட இரு கோடுகள்ல வர்ற ஒரு தத்துவம் மாதிரி சார்” என்று ஆரம்பித்தார் விசித்ரா. ‘உங்களுக்குத்தான் பாலசந்தர் தெரியுமா… எனக்கும்தான் தெரியும்’ என்பது அதன் அர்த்தம். “வீழ்வது வீழ்ச்சியல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான் வீழ்ச்சி” என்று தன் பங்கிற்குத் தானும் ஒரு காலண்டர் வாசகத்தை சொன்னார் கமல். “கண்ணாடிதான் என் குரு. அது முன்னாடிதான் நிறைய விஷயங்களைக் கத்துப்பேன்” என்றார் விஜய். “ஆமாம். அது குரூரமான விமர்சகன். கருணையில்லாமல் உண்மையைச் சொல்லிடும். அதனால்தான் டான்ஸ் ப்ளோர்ல கண்ணாடி வெச்சிருக்காங்க. மோசமா நடனம் ஆடினா காட்டிக் கொடுத்துடும்” என்று சிரித்தார் கமல்.
“சோர்வா இருக்கும் போதெல்லாம் பிக் பாஸ்ல கிடைத்த அரிய வாய்ப்பை நெனச்சுப்பேன்” என்ற பூர்ணிமா அதற்காக விஜய் படத்தின் டயலாக் எல்லாம் சொன்னார். ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து’ என்கிற பாரதிதாசன் பாடலைச் சொல்லி ‘தான் வித்தியாசமான கேட்டகிரி’ என்பதைக் காட்டிக் கொண்டார் மாயா. கிரியேட்டிவிட்டிதான் மாயாவின் பலமாம். கலைதான் அவருக்கு உயிராம். “நடந்தது எல்லாமே நல்லதுக்கு. இதுவும் கடந்து போகும்” என்று காலண்டர் வாசகத்தை ஒப்பிக்கிற பாணியில் இரண்டு காரணங்களைச் சொன்ன ரவீனா மூன்றாவதாகச் சொன்ன காரணம் சுவாரஸ்யமானது. “மணிதான் எனக்கான உந்துசக்தி. உன்னால முடியும்ன்னு அவன்தான் நிறைய முறை சொல்லியிருக்கான்” என்று சொல்ல சபையே உற்சாகமாகி சிரித்தது. “சரியா கேட்கலை. மீண்டும் சொல்லுங்க” என்று குறும்பு செய்தார் கமல். (‘அந்தத் தவில்காரன் காதுல விழற மாதிரி சொல்லுங்க’ என்று கமல் குறும்பு செய்தது ஆன்ட்டிக்கான செய்தியோ?!)
“தனிமைதான் எனக்கு நண்பன். நான் சினிமால நல்லா வந்துடுவேன்னு நம்பி சில நண்பர்கள் இருக்காங்க. அவங்களுக்காகவும் நான் உழைக்கணும். அது இல்லாம நான் இங்க வேலை செய்ய வந்திருக்கேன். அதுக்கு சம்பளம் வாங்கறேன்” என்று நேர்மையாகச் சொன்னார் நிக்சன்.
மக்கள்தான் எனக்கான உந்துசக்தி – கமல்
“ஓகே… என்னோட உந்துசக்தி எது தெரியுமா” என்று ஆரம்பித்த கமல், பார்வையாளர்களை நோக்கி ‘மக்கள்’ என்று கைகாட்டியது சிறப்பாக இருந்த அதே சமயத்தில் நாடகத்தனமாகவும் தெரிந்தது. “எனக்கும் சலிப்பு வரும். ஓ… சனிக்கிழமை வந்துடுச்சா. இங்க வரணுமான்னு. ஆனா மூணு கோடி பேர் மக்களை ஒரே சமயத்தில் சந்திக்க வாய்ப்பு தரும் மேடை இது. பத்தாயிரம் பேரை கூட்டறதுக்கு ஏற்பாடு செய்யணும்னாலே எவ்வளவு பெரிய கஷ்டம்?! நான் நட்சத்திரமாக இருந்தாலும் என் சினிமா வாழ்க்கையின் உச்சம் இதுதான்” என்று புளகாங்கிதப்பட்ட கமல் ‘இகிகாய்’ புத்தகத்தின் உள்ளடக்கத்தை மீண்டும் பரிந்துரைத்தார்.
“ஓகே ரவீனா… இன்னமும் உங்க குழப்பம் தீரலைப் போல” என்று கமல் சொல்ல “இல்ல சார். குழப்பம் இல்ல” என்று ரவீனா பதிலளித்தாலும் கமல் விடுவதாக இல்லை. “இல்ல. உங்க குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும். ஸ்டோர் ரூம்ல போய்ப் பாருங்க” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.
மணி செய்த காமெடி காட்சிகள்
பிறகு நடந்த டிராமாவில் மணி நடந்து கொண்ட விஷயங்கள் அனைத்துமே காமெடியாகவும் க்யூட் ஆகவும் இருந்தன. ஸ்டோர் ரூமில் இருந்த பொருள் ரவீனாவின் அம்மா. ‘என்னவா இருக்கும்?’ என்கிற திகைப்புடன் நுழைந்த ரவீனா, சட்டென்று தெரிந்த உருவத்தைப் பார்த்து தன்னிச்சையாக அலறியது ஒரு காமெடி. அதைவிடவும் பெரிய காமெடி, மணி துள்ளிக்குதித்து கூட்டத்திலிருந்து விலகி ஓடியது. ‘அய்யய்யோ… ஆன்ட்டி அடிச்ச அடியே இன்னமும் ஆறலை. அதுக்குள்ள அம்மாவா?’ என்று பதறிவிட்டார். எனவே அந்தப் பீதியுடனே உலவினார். அடிக்கடி தண்ணீர் எடுத்து குடித்தார். (தண்ணியக்குடி. தண்ணியக்குடி..!)
“உள்ளே ஒளிஞ்சிருந்தியா?” என்று அம்மாவிடம் ரவீனா கேட்டது ஒரு எல்கேஜி குழந்தையைப் போலவே இருந்தது. (இந்தப் பொண்ணை எந்த கேட்டகிரில்ல சேர்க்கறதுன்னே தெரியலையே?!). “என்னைப் பார்க்காம ஒல்லியா இருப்பேன்னு நெனச்சேன்” என்று அடுத்த காமெடி வெடிகுண்டை எறிந்தார் ரவீனா. ரவீனாவின் அம்மா ‘மாஸ்டர்’ என்று மணியை அழைத்த போதே தெரிந்து விட்டது, அவர் கடுமையாகப் பேசப் போவதில்லையென்று. (அதுதான் ஆள் வைத்து ஏற்கெனவே அடித்துவிட்டாரே!).
“மாஸ்டர் கிட்ட பேசறியா?” என்று தன் அம்மாவை வம்படியாக இழுத்துக் கொண்டு வந்தார் ரவீனா. “என்னதிது இடுப்புல மாட்ட வேண்டிய பெல்ட்டை கழுத்துல மாட்டியிருக்காரு” என்று ரவீனாவின் அம்மா கிண்டலடிக்க, சரக்கென்று இழுத்து அதைப் பாக்கெட்டில் மணி போட்டுக் கொண்டது ரகளையான காமெடி. அது ஆடையில் இருந்த ஒரு ஸ்டைல். இதையே ரவீனாவின் அம்மா இப்படிக் கிண்டல் செய்கிறார் என்றால், கமல் அணிந்து வரும் விசித்திரமான ஆடை வடிவமைப்பிற்கெல்லாம் என்ன சொல்லுவார்? இன்று கமல் அணிந்திருந்த ஆடையில் கூட கங்காரு குட்டியின் பை போல இரண்டு பாக்கெட்டுக்கள் வெளியே அநாவசியமாக நீண்டிருந்தன.
“டேய்… அவங்க பேச வந்திருக்காங்க… போடா” என்று பக்கத்தில் இருந்த விக்ரமிடம் தாழ்ந்த குரலில் எச்சரித்தார் மணி. ஆனால் விக்ரமோ “அம்மா… எனக்கு சாக்லேட் கொடுத்ததான் போவேன்” என்று வம்படியாக செய்த குறும்பு ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது. நண்பர்கள் இப்படித்தான் சரியான சந்தர்ப்பங்களை உபயோகித்து வெறுப்பேற்றுவார்கள். “எனக்கு?” என்று தன் சாக்லேட் பங்கை உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொண்டார் மணி. அம்மாவின் கோபம் எத்தனை டிகிரி என்பதை சோதித்துப் பார்க்கிறார் போல. ஆனால் அவரோ கூலாகத்தான் இருந்தார். அதற்குப் பிறகுதான் மணிக்கு உயிரே வந்தது. என்றாலும் பீதி அடங்காமல் கேமரா முன்னால் நின்று ‘பிரெண்ட்ஸ்… இப்ப பார்த்தீங்கன்னா… அவங்க கோபமா இருக்கற மாதிரிதான் தெரிஞ்சது. தட்டைக் கழுவி எடுத்துட்டுப் போறேன். என்ன நடக்கப் போகுதோ’ என்று vlogging செய்து கொண்டிருந்தார். லைக் பண்ணுங்க. ஷோ் பண்ணுங்க என்று மட்டும்தான் பதற்றத்தில் சொல்லவில்லை.
“உன்னைப் பார்த்ததும் என் உடம்பு எல்லாம் சரியாயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருந்த ரவீனாவின் அம்மா, ஹால் பக்கம் நகர “யாரு இங்க குப்பை போட்டிருக்காங்க…” என்று கர்ம சிரத்தையாக அதைச் சுத்தம் செய்து கொண்டிருந்த மணியின் காமெடி சிரிப்பை ஏற்படுத்தியது. (நல்ல பெயர் வாங்கறாராம்!). “என்னைப் பார்த்து ஏன் இப்படி ஓடறாரு. முன்னாடியே வந்திருந்தா பாத்ரூம்லயே இருந்திருப்பாரு போல” என்று ரவீனாவிடம் கிண்டலடித்தார் அவரது அம்மா. அவர் விடைபெற்றுக் கொண்டு செல்ல வேண்டிய நேரம். பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி சென்ற மணி “கத்துக்கங்கடா” என்று விஷ்ணுவிடம் சொல்ல, “டேய்… பல்லு இருக்கறவன் பகோடா சாப்பிடறான்… நீ போ. நாங்க ஏன் வரணும்?” என்று விஷ்ணு தந்த பதிலடி கலகல.
இந்த வார எவிக்ஷனில் ‘டைட்டில் வின்னர்’ என்று கிண்டலும் பாராட்டும் செய்யப்பட்ட விக்ரம்தான் வெளியேறுகிறார் என்று தெரிகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
+ There are no comments
Add yours