சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று 1,489 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.
அதேபோல் சென்னையில் ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதுவரை 92 பேர் சென்னையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கவனத்தில் கொள்ளப்படாதது குறித்து தீவிர பரிசீலனை செய்தது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு போல கொரோனா பாதிப்பு மிகுதியாகி விடக்கூடாது, எப்படியாவது கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று முழு முனைப்புடன் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
மெரினா கடற்கரைக்கு பொழுது கழிக்க ஏராளமானோர் வருவதை தடுக்கும் வகையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல முயன்றால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள போலீசார், அவர்களை தடுத்து நிறுத்துவார்கள்.
இந்த தடை உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக நடைபாதையில் செல்வதற்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *