தென் அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் வெளியாகும் ‘2018’
14 நவ, 2023 – 12:17 IST

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘2018’. தற்போது ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது.
பெருவெள்ளத்தின் போது மலையாள இளைஞர்கள் எப்படி மனிதாபிமானத்துடன் மதம், ஜாதி தாண்டி செயல்பட்டார்கள் என்பதை மைய கருவாக கொண்ட படம். இதனால் இந்த படத்தை மலையாளிகள் கொண்டாடினார்கள். 200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில்தான் படம் இந்திய அரசு சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வானது. இது மலையாளிகளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த படத்தை தற்போது ஓடிடியில் பார்க்கலாம் என்றாலும் தென் அமெரிக்காவில் வாழும் மலையாளிகள் படத்தை தியேட்டரில் பார்க்க விரும்புகிறார்கள். இதனால் தென் அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இதனை துபாயை சேர்ந்த ஏரீஸ் குழுமத்தின் சினிமா பிரிவு வெளியிடுகிறது.
தற்போது அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கும் படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இதுகுறித்து கூறும்போது “உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து ஆதரவும், அன்பும் எங்களுக்கு கிடைப்பதில் மகிழ்ச்சி. தென் அமெரிக்காவில் ‘2018’ ரிலீஸ் செய்யப்படுவது இந்திய சினிமாவுக்கே ஒரு மைல் கல்லாக இருக்கும். கலாசாரத்தை கடந்து படம் பேசும் மனிதநேயம் பார்வையாளர்களை ஊக்குவிக்கும். தென் அமெரிக்க பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக இது இருக்கும்” என்றார்.
+ There are no comments
Add yours