கோவையில் நகைக்கடை ஒன்றில் ரூ.200 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கொள்ளையடித்த பாணியை வைத்து இந்தச் சம்பவத்துக்கு ஜப்பான்தான் (கார்த்தி) காரணம் என்று முடிவு செய்கிறது காவல் துறை. கொள்ளையடிக்கும் பணத்தில் கார்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அவரைப் பிடிக்க இரண்டு போலீஸ் தனிப்படை அமைக்கப்படுகிறது. இந்தத் துரத்தல் திரைக்கதையில் கார்த்தி போலீஸில் சிக்கினாரா இல்லையா, அவருக்கு என்ன நேர்கிறது என்பதே மீதிக் கதை.
எளிய மக்களின் கதைகளை படமாக்குபவராக அறியப்படும் ராஜு முருகன், கமர்ஷியல் பார்முலாவில் சொல்லியிருக்கும் கதை இது. முன்னணி நாயகனுக்குரிய கமர்ஷியல் திரைக்கதை என்றாலும், படம் தொடங்கி கிளைமாக்ஸ் வரை ஓர் எளிய குடும்பத்தின் வாழ்க்கை ஒன்றையும் திரைக்கதையோடு முடிச்சுப் போட்டு, தன் பாணிக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர். சிறுவயதிலிருந்து தாயிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் நாயகன், அதைத் திருத்திக்கொள்ள கிளைமாக்ஸில் எடுக்கும் துணிச்சலான முடிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. வெளியே சொல்லவே அஞ்சும் ஒரு நோய் தனக்கு இருப்பதாக ஒரு முன்னணி நாயகன் சொல்லும் காட்சிகள் துணிச்சலானவை. இடையிடையே கதையோட்டத்தோடு நாயகன் பேசும் சமகால அரசியல் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
இதுபோன்ற அம்சங்களைத் தாண்டி படம் முழுக்க வழக்கமான கமர்ஷியல் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது பெரும் பலவீனம். ஒரு கொள்ளைச் சம்பவம், போலீஸ் விசாரணை, நாயகனின் பராக்கிரமம் எனப் பரபரப்புடன் தொடங்கும் கதை, பிறகு சுவாரசியம் இல்லாமல் இழுவையாக மாறி திரைக்கதைக்கு வேகத் தடைப் போட்டுவிடுகிறது. கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதே தெரியாமல் முதல் பாதி நகர்வது அயர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. கொள்ளை தொடர்பாக படத்தில் வரும் திருப்பங்களிலும் ரசனை இல்லை. இரண்டாம் பாதியில் இறுதிக் காட்சிகள்தான் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஒரு பெரும் கொள்ளைக்காரனான நாயகன், பெருமைக்காக சினிமா நாயகனாகவும் நடிப்பதாகக் காட்டும் காட்சிகள் மிகையான கற்பனை. ஒரு கட்டத்தில் கொள்ளைக்கார நாயகனுடன் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து பயணிப்பது போன்ற காட்சிகள் பூச்சுற்றல்.
ஜப்பான் கதாபாத்திரத்தில் கார்த்தி தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சிகை அலங்காரம், உடல்மொழியில் மட்டுமல்லாமல் குரலிலும் மாற்றம் காட்டி வெரைட்டியாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் அனு இம்மானுவேல் கவர்ச்சி பொம்மையாக வந்து செல்கிறார். இயல்பான நடிப்பில் வாகை சந்திரசேகர் கவர்கிறார். நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கே.எஸ். ரவிகுமார், விஜய் மில்டன், சுனில், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை அதை நேர் செய்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்துக்குப்பலம். இழுவையான காட்சிகளுக்கு பிலோமின்ராஜ் கருணையின்றி கத்தரி போட்டிருக்கலாம்.
+ There are no comments
Add yours