டல்லடிக்கிறதா 2023 தீபாவளி ?
11 நவ, 2023 – 12:29 IST
சமூக வலைத்தளங்களில் சண்டையில்லை, வந்த படங்களில் சர்ச்சை எதுவுமில்லை, முதல் நாள் வசூல் எவ்வளவு என ரசிகர்கள் யாரும் கேட்கவில்லை, இப்படி… இல்லை… இல்லை என இந்த 2023ம் வருட தீபாவளி டல்லடிக்கிறதா என்ற கேள்வி ஒன்று எழுந்துள்ளது.
இந்த தீபாவளியை முன்னிட்டு, நேற்று கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’, காளி வெங்கட் நடித்துள்ள ‘கிடா’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படங்களைக் காட்டிலும் ‘கிடா’ படம் தரமான ஒரு படமாக இருக்கிறது என்பதுதான் விமர்சகர்களின் பாராட்டாக உள்ளது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் தான் சொல்கிறார்கள். கார்த்தி, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோர் அவர்களது படங்களில் அவர்களது கதாபாத்திரங்களில் நன்றாக நடித்திருந்தாலும் அழுத்தமான கதை அந்தப் படங்களில் இல்லாததால் அவர்களது நடிப்பு பெரிய அளவில் எடுபடவில்லை என்பது பல விமர்சனங்களின் கருத்தாக உள்ளது. படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் பலரும் அதையேதான் சொல்கிறார்கள்.
விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த ‘ரெய்டு’ படம் நேற்று காலை காட்சிகளில் வெளியாகாமல் மதியக் காட்சிகளில்தான் வெளியானது. அதனால், அந்தப் படம் பற்றிய விமர்சனங்கள் இன்னும் பெரிதாக வரவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வந்தால்தான் தீபாவளி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் தெரிவிக்கிறார்கள்.
+ There are no comments
Add yours