பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் மாடலும், நடிகையுமான உர்ஃபி ஜாவேத் எப்போதும் ஆடைகள் அணிவதில் வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றக்கூடியவர். அவர் அணியும் ஆடைகள் ஆபாசமாக இருந்ததோடு, சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இதனால் அவருக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் கூட விடுத்திருக்கின்றன. பா.ஜ.க, உர்ஃபி ஜாவேத் மீது மும்பை போலீஸில் புகாரும் செய்திருந்தது. இதற்காக அவரை மும்பை போலீஸார் அழைத்து விசாரித்தனர்.
தொடர் ஆடை சர்ச்சைகளால் அவருக்கு மும்பையில் வீடு வாடகைக்குக் கொடுக்கக் கூட மக்கள் தயங்கினர். இதனால் திடீரென உர்ஃபி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “நான் அணியும் ஆடைகளால் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேறு மாதிரியான உர்ஃபியை இனி பார்ப்பீர்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சில ரசிகர்கள், “என்ன நடந்தது?” என்று கேட்டுப் பதிவிட்டுள்ளனர். ஒருவர், “நீங்கள் விரும்பும் ஆடையை அணிந்து கொண்டு சுதந்திரமாக இருங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “நீங்கள் விரும்பி அணியும் ஆடையுடன் உங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே ஆடையை நீங்கள் சிரமமின்றி அணியலாம். நீங்கள் மிகவும் துணிச்சலான பெண். என்ன அணிய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது உங்கள் விருப்பம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “நீங்கள் மாறவேண்டாம். நீங்கள் அழகாகவும், தைரியமாகவும் இருக்கிறீர்கள். நெறிமுறைகளுக்கு எதிராகச் செல்ல தைரியம் தேவை. உங்களுக்கு நீங்கள் விசுவாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி அனைவரையும் முட்டாளாக்கும் அறிவிப்பாக இருக்குமோ என்று சந்தேகத்தையும் கிளப்பியிருக்கின்றனர்.
+ There are no comments
Add yours