ஆஸ்கர் விருது : ‘ஆர்ஆர்ஆர்’-ஐ, பாலிவுட் படம் என்பதா? – தெலுங்கு ரசிகர்கள் கோபம்
13 மார், 2023 – 12:50 IST
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி மார்ச் 12ம் தேதி ஞாயிறு இரவு(இந்தியாவில் இன்று காலை) நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விருதுகளில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகளை வென்றுள்ளார்கள். ‘த எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற தமிழில் தயாரான டாகுமென்டரி குறும்படத்திற்கு சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் விருதை ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது.
விழா நடக்கும் போது மேடையில் அந்தந்த விருதுகளைப் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்படும். அப்படி சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான விருது பற்றிய அறிவிப்பை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் வெளியிட்ட போது ‘நாட்டு நாட்டு’ பாடலைப் பற்றி பாலிவுட் படம் என்று குறிப்பிட்டார். அதை தெலுங்குப் படம் என்று குறிப்பிடாதது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படம் என்றால் அது ஹிந்திப் படங்களையே குறிக்கும். ‘ஆர்ஆர்ஆர்’ படம் பற்றிய அனைத்து பேட்டிகளிலும் அது தெலுங்குப் படம் என்றே மறக்காமல் குறிப்பிட்டு வந்தார் படத்தின் இயக்குனரான ராஜமவுலி. அப்படியிருக்கும் போது விழாக் குழுவினர் கவனக் குறைவாக படத்தை பாலிவுட் படம் எனக் குறிப்பிட்டதற்குப் பதிலளிக்க வேண்டும் என பல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
+ There are no comments
Add yours