ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி..! பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை.!!

Estimated read time 1 min read

மதுரை:

மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் சக்திவேல். 37 வயதான இவர்மீது கொலை,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் தலையை வெட்டி, கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக 2021ல் கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மத்திய சிறையில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது குண்டார் சக்திவேலை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து போனது. மர்ம நபர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் குண்டார் சக்திவேலை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். அதில் நிலைகுலைந்து போன சக்திவேல், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடிக்க உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காடுபட்டி போலீசார் சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். தடயவியல் வல்லுநர்களும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர், கொலை செய்யப்பட்ட சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சக்திவேல் 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் பழிக்கு பழியாக திட்டமிட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதனால் இப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

                                                                                                          – Gowtham Natarajan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours